பதிவு செய்த நாள்
05
ஏப்
2025
12:04
பழநி; பழநி கோயில் பங்குனி உத்திர திருவிழா இன்று திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
பழநி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருஆவினன்குடி கோயிலில் கொடுமுடி தீர்த்தக்காவடிக்கு புகழ் பெற்ற பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று (ஏப்.,5,) முன்மண்டபத்தில் வள்ளி தேவசேனா முத்துக்குமாரசுவாமி எழுந்தருளினார். அதன் பின் கலசங்கள் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. மஞ்சள் கொடியில் சூரியன், சந்திரன், வேல், மயில் சேவல்,பாம்பு, தாம்பூலம், மணி, விளக்கு வரையப்பட்ட கொடியை கொடி கம்பத்தின் முன் வைத்து பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் காலை 11:00 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பூஜைகள் அமிர்தலிங்க குருக்கள், செல்வ சுப்பிரமணிய குருக்கள் குழுவினரால் நடந்தது. கொடி ஏற்ற விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அரோகரா கோசத்துடன் வழிபட்டனர். நிகழ்ச்சியில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, அறங்காவலர் குழுவினர் பக்தர்கள் கலந்து கொண்டனர். உச்சிக்கால பூஜையில் மலைக் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவிற்கு சுவாமிகளுக்கு காப்பு கட்டப்பட்டது. விழா நாட்களில் வெள்ளிகாமதேனு, வெள்ளி ஆட்டுக்கடா,பெரிய தங்கமயில், , தங்க குதிரை, வெள்ளி யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். ஏப்.,9 மலைக்கோயிலில் திருக்கோயில் சார்பாக தங்க பிரத சுவாமி புறப்பாடு நடைபெறும். ஏப்.10., முதல் ஏப்.13 வரை தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறாது.
திருக்கல்யாணம்: திருவிழாவின் ஆறாம் திருநாளான ஏப்.,10 ல் காலை தந்த பல்லாக்கில் சுவாமி புறப்பாடு கிரி வீதியில் நடைபெறும். பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் மாலை 5:30 மணிக்கு மேல் மாலை 6:30 மணிக்குள் நடைபெறும். அன்று இரவு 8:30 மணிக்கு மேல் வெள்ளி தேரோட்டம் சன்னதி வீதி, கிரி வீதிகளில் நடைபெறும். பங்குனி உத்திர தேரோட்டம்: ஏப்.,11 ல் மதியம் 12:00 மணிக்கு மேல் மதியம் 1:30 மணிக்குள் சுவாமி திருத்தேரில் எழுந்தருளல் நடைபெறும். மாலை 4:30 மணிக்கு பங்குனி உத்திர திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டம் கிரிவீதிகளில் நடைபெறும். ஏப்.,14 அன்று மாலை தெப்பத் தேர் திருவிழா நடைபெறும். அன்று இரவு கொடி இறுக்குதலுடன் திருவிழா நிறைவடையும். மேலும் பழநி கிரிவிதி குடமுழுக்கு விழா அரங்கத்தில் பங்குனி உத்திர கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.