பதிவு செய்த நாள்
06
ஏப்
2025
07:04
பூந்தமல்லி; பூந்தமல்லியில் வைணவ மகான் திருக்கச்சி நம்பிகளின் அவதார தலமாக வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, திருக்கச்சி நம்பிகளின் மங்களாசாசன வைபவம், இன்று நடந்தது. இதை முன்னிட்டு, நேற்று காலை 8:00 மணிக்கு, திருக்கச்சி நம்பிகள் வாகன மண்டபத்திற்கு எழுந்தருளினார். இதையடுத்து, ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீவரதராஜர், ஸ்ரீசீனிவாசர் ஆகிய மூன்று பெருமாள்களும், மூன்று கருட வாகனங்களில் எழுந்தருளினர்.இதையடுத்து, ஆஸ்தான மண்டபத்தில் இருந்து கோபுர வாசலுக்கு மூன்று பெருமாள்களும் தனித்தனியே எழுந்தருளி, திருக்கச்சி நம்பிக்கு காட்சி அளித்தனர். தொடர்ந்து, மூன்று கருட வாகன வீதி உலா நடந்தது.
பிரதான திவ்ய தேசமான திருப்பதி, ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் ஆகிய பெருமாள்களின் மூன்று கருட சேவையை, ஒன்றாக பார்க்கும் நிகழ்வு, இக்கோவிலை தவிர்த்து வேறு எங்கும் காண இயலாது. இந்த மூன்று கருட சேவையை சேவித்தால், 108 திவ்ய தேசங்களுக்கும் சென்று வழிபட்ட பாக்கியம் கிடைக்கும் என்ற ஐதீகத்தால், இன்று நடந்த கருட சேவை உத்சவத்தை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர். தொடர்ந்து, மாலை 4:00 மணிக்கு திருமஞ்சனம் எனும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.