பதிவு செய்த நாள்
06
ஏப்
2025
07:04
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கோவை, மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. கோவிலில், ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி, மஹா சிவராத்திரி, பங்குனி உத்திர தேர்த்திருவிழா ஆகிய திருவிழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டு பங்குனி உத்திர தேர்த்திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் மாலை, இறை அனுமதி பெறுதல், புற்று மண் எடுத்தல், முளைப்பாலிகை, வாஸ்து சாந்தி நடந்தது. இன்று அதிகாலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு, 16 வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காலை, 8:00 மணிக்கு, வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டு, காலை, 8:40 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, கொடிமரத்தில் நந்தி உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. மாலை, 4:00 மணிக்கு, வேள்வி பூஜை, அபிஷேகம் திருவீதி உலா நடந்தது. தேர் திருவிழாவின் ஐந்து நாட்களும், காலையும், மாலையும், வேள்வி பூஜை, திருவீதி உலா நடக்கிறது. ஐந்தாம் நாளான வரும், 10ம் தேதி, மாலை, 4:00 மணிக்கு, திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.