பதிவு செய்த நாள்
07
ஏப்
2025
08:04
சிருங்கேரி,; சிருங்கேரி சாரதா பீடாதிபதி பாரதி தீர்த்த மஹா ஸ்வாமிகளின் 75வது ஜன்மதின விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அதை ஒட்டி, சன்னிதானம் விதுசேகர பாரதீ மஹா ஸ்வாமிகளின் அருளுரை:
நடமாடும் சாரதாம்பாளாகத் திகழும் நம் குருவை, சிறு வயதிலிருந்தே தரிசிக்கும், அவரது உபதேசங்களைக் கேட்கும் பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறது; பல ஜன்ம புண்ணியம் இது. குருவுக்கு சிறிதளவாவது சேவை செய்து, அவரது அருளுக்கு நாம் பாத்திரமாக வேண்டும். ‘பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து வகையான கல்வியிலும் உயர்ந்ததான ஆத்ம வித்யையாக நான் இருக்கிறேன்’ என்று பகவான் கிருஷ்ணர் கூறி இருக்கிறார். பிரம்ம வித்யையை தான் பகவான் இப்படி கூறுகிறார். இதை போதிக்கும் பரம்பரை, அவரிடமிருந்தே துவங்குகிறது. அவரிடமிருந்து சனாதன தர்மத்தை வசீகரித்த ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரை நடுநாயகராகக் கொண்டு, இன்று நம் குருநாதர் வரையிலான ஆசார்யர்களை நாம் வணங்க வேண்டும்.
கேள்வி கேட்டு பதில் பெற்று முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்கிற படியால், குருவை மனதாலும், உடலாலும் நமஸ்கரித்து, சேவை செய்ய வேண்டும். குருநாதர் நம்மை எந்த செயலைச் செய்யச் சொல்கிறாரோ அதைச் செய்ய வேண்டும். நாம் கேட்ட கேள்விக்கு அது சம்பந்தம் இல்லாமலும் இருக்கலாம்; ஆனால் செய்ய வேண்டும். இப்படி நம்மை நாமே முழுதுமாய் அர்ப்பணித்து குரு சேவை செய்ய வேண்டும். கல்லுக்கும், ரத்தினத்துக்கும் வித்தியாசம் அறிய, அதற்குரிய அறிவை நாம் பெற வேண்டும் அல்லவா... அந்த அறிவைப் பெற நாம் தகுதியுள்ளவர்களா என்பதை குருநாதர் தான் கண்டுபிடிப்பார். எனவே, அவரின் பெருமையை புரிந்து கொள்ள, அவரது மகிமையை அறிய, நாம் தகுதியுள்ளவர்களாக நம்மை ஆக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு குருநாதரை போற்றி வணங்குவோம். அப்படிப்பட்ட குருநாதரை வணங்குவோர் எவரும், வாழ்வில் உயர்வடையட்டும், அவரது துக்கங்கள் துாரமாகட்டும்; சனாதன வைதிக தர்மம் செழிக்கட்டும். அனைவரும் எங்கள் நாராயண ஸ்மரணபூர்வகமான ஆசிகள்!