பதிவு செய்த நாள்
07
ஏப்
2025
08:04
பந்தலூர்; நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உப்பட்டி பகுதியில் கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது. இதன் ஆண்டு திருவிழா கடந்த நாலாம் தேதி வனக்காவலர் பிரபு, பிந்து தலைமையில் குத்து விளக்கு ஏற்றி திருநங்கை கார்த்திகா தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டுள்ளன மறுநாள் நாகக்கன்னி பூஜை, முனி பலி பூஜைகள் நடந்தது.
மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை நாலு மணிக்கு ஐ எம் சி கூத்தாண்டவர்கள் கண் திறப்பு பூஜை, தொடர்ந்து ஆடு, சேவல் பலி பூஜைகள் நடந்தது. அதனையடுத்து நடந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட திருநங்கைகள் நல சங்க தலைவி நிஷா, வக்கீல் சௌமியா சாஸ், கார்த்திகா, பிங்கி ஆகியோர் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருநங்கைகளின் சார்பில் திருமண சீர்வரிசை எடுத்து வரப்பட்டது. கோவில் பூசாரி ஆசை, திருநங்கைகளுக்கு தாலி கட்டினார். தொடர்ந்து பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறப்பட்டதுடன், தேங்காய் உடைத்து பக்தர்களுக்கு திருநங்கைகள் சார்பில் அருளாசி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டதுடன், களபலி பூஜை நடத்தப்பட்டு தாலி அறுப்பு நிகழ்ச்சி நடந்தது. இதனைப் பார்த்த பெண்கள் கதறி அழுதது அனைவரும் கண்களிலும் கண்ணீரை வரவைத்தது. தொடர்ந்து மக்கள் பங்கேற்ற பூஜையுடன் விழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பூசாரி தலைமையில், தலைவர் கணேஷ் செயலாளர் கூத்தையா, பொருளாளர் சண்முகம், ஆலோசகர் சி. ஆசை, துணை ஆலோசகர் முருகன் மற்றும் நீலகிரி மாவட்ட திருநங்கைகள் குழுவினர் செய்திருந்தனர்.