கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயில் கும்பாபிஷேகம் -திரளான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2025 04:04
கூடலுார்; கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கூடலுார் ஒக்கலிகர் காப்பு மகாஜன சங்கத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு கூடல் சுந்தரவேலவர் கோயில் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. புண்ணிய நதி தீர்த்தம் எடுத்து வந்து தீர்த்த சங்கரகணம் செய்யப்பட்டது. நவக்கிரக ஹோமம், வாஸ்து பூஜையை தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடந்தன. 4 கால யாக சாலை பூஜைக்கு பின் ஜீவ கும்பம் புறப்பாடு நடந்தது.
வள்ளி தேவசேனா சமேத கூடல் சுந்தர வேலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் ஸ்தலத்தார் பிரம்மஸ்ரீ சங்கர நாராயண சர்மா தலைமையிலான குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். ராஜகோபுரம் மற்றும் மூலஸ்தான கோபுரத்தில் மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து அபிஷேகம் விசேஷ தீபாராதனை நடந்தது. புனித நீர் தெளிக்கப்பட்டது. அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கூடலுார் ஒக்கலிகர் காப்பு மகாஜன சங்க தலைவர், செயலாளர், பொருளாளர், நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் தெருச் செயலாளர்கள் செய்திருந்தனர். முஸ்லிம் சமுதாயத்தினர் கோயிலுக்கு குத்துவிளக்கு வழங்கி விழாவில் கலந்து கொண்டனர்.