தேரழுந்தூர் கோவிந்தராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2025 04:04
மயிலாடுதுறைl தேரழுந்தூர் கோவிந்தராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தேரழுந்தூரில் புண்டரீக வல்லி தாயார் சமேத கோவிந்தராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பஞ்ச காரண்ய சேத்திரங்களுள் ஒன்றான இக்கோவில் திருமங்கை ஆழ்வாரின் அபிமான ஸ்தலமாக திகழ்கிறது. இக்கோவிலில் கோவிந்தராஜ பெருமாளை தரிசனம் செய்தால் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் திருப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 4ம் தேதி பூர்வாங்க பூஜைகளும், 5ம் தேதி யாகசாலை பூஜைகளும் தொடங்கின. இன்று காலை 5ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. காலை 9:10 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவில் விமானங்களை அடைந்தது. தாயாருடன் பெருமாள் கோவில் பிரகாரத்தில் எழுந்தருள வேத மந்திரங்கள் ஓத 10 மணிக்கு கோவில் அர்ச்சகர் கோசகன் பட்டாச்சாரியார், சர்வ சாதகம் திருநாங்கூர் வேதராஜன் சுவாமிகள் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திருஞானம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள், தாயாரை சேவித்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு குத்தாலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்