பதிவு செய்த நாள்
11
ஏப்
2025
12:04
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பின் நடந்த கும்பாபிஷேகத்தில் திரளாக பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.
திருப்புத்தூர் தெற்கு எல்லைத் தெய்வமாக பூமாயி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் மூலவர் சப்த மாதாக்களில் நடுவரான வைஷ்ணவியை பூமாயி அம்மனாக பக்தர்களால் தரிசிக்கப்படுகிறார். அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள இக்கோயிலுக்கு கடந்த 21-06-1981ல் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 1994,2008ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. தற்போது 16 ஆண்டுகளுக்குப் பின் திருப்பணிகள் துவங்கி ராஜகோபுரம், விமானம், சப்தமாதர், பைரவர். ஆதிவிநாயகர், முருகன், ஆஞ்சநேயர், நவக்கிரகம் சன்னதிகள்,கோயில் முன் மண்டபம் தூண்கள் பராமரிப்பு, சுதை வேலைப்பாடுகள், வண்ணப்பூச்சு செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏப்.7 ல் 33 குண்டங்களுடன் உத்தமபட்ச யாகசாலை, பரிவார தெய்வங்களுக்கு 6 குண்டங்களுடன் யாகசாலை களில் புனித நீர் அடங்கிய 108 கலசங்களுடன் பூஜைகள் துவங்கியது. பிள்ளையார்பட்டி கே.பிச்சைக்குருக்கள் தலைமையில் சோமசுந்தரம்,பாஸ்கர்,ரமேஷ் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யர்கள் யாக பூஜைகள் செய்தனர். தொடர்ந்து இருநாட்களில் ஐந்துகால யாக பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. ஐந்தாம் காலயாக பூஜையில் குன்றக்குடி பொன்னம்பல அடிகள் பங்கேற்றார். இன்று அதிகாலை 5:00 மணிக்கு ஆறாம் கால யாகபூஜை துவங்கியது. தொடர்ந்து காலை 7:40 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. பின்னர் காலை 8:05 மணிக்கு சிவாச்சார்யர்களால் யாகசாலையிலிருந்து புனித நீர் நிறைந்த கலசங்கள் கோபுர,விமானங்களுக்கு புறப்பாடானது.
பி்ன்னர் காலை 8:38 மணிக்கு அமைச்சர் பெரியகருப்பன் பச்சை கொடி அசைக்க, வேத மந்திரங்கள்,திருமுறைகள் ஒலிக்க, மங்கள வாத்தியங்கள் முழங்க, டாக்டர் பிச்சைக்குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யர்களால் விமான,கோபுர கலசங்களில் புனித நீரால் கும்பாபிஷேகம் நடந்தது. திரளாக பக்தர்கள் பங்கேற்று கும்பாபிஷேகத்தை தரிசித்தனர். பின்னர் மூலஸ்தானங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. மாலையில் மகா அபிஷேகம், தீபாராதனையும் நடந்தது. இரவில் அம்மன் திருவீதி உலா நடந்தது. ஏற்பாட்டினை உபயதாரர், முன்னாள் தக்கார் நா.ஆறு.தங்கவேலு, தக்கார் து.பிசு்சுமணி, செயல் அலுவலர் எஸ்.விநாயகவேல் செய்தனர்.