பதிவு செய்த நாள்
12
ஏப்
2025
10:04
பெங்களூரு; பெங்களூரு அரண்மனை மைதானத்தில், 12 ஜோதிர்லிங்கத்தையும், ஒரே இடத்தில் தரிசிக்கும் வாய்ப்பை, ‘ஆயுஷ் டிவி’ நிறுவனம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
பெங்களூரு நாகஷெட்டிஹள்ளியில் இயங்கி வரும், ‘ஆயுஷ் டிவி’ நிறுவனம் சார்பில், பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நான்கு நாட்கள் நடக்கும் உலகளாவிய நல்வாழ்வு சங்கமம் – 2025 நேற்று துவங்கியது. சுத்துார் மடத்தின் ஜகத்குரு ஸ்ரீசிவராத்திரி தேசிகேந்திர சுவாமிகள், கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் துவக்கி வைத்தனர். ஆயுஷ் பெடரேஷன் ஆப் இந்தியா, ஹிமாலயா, பிரசாந்தி ஆயுர்வேதா, திபெத்தியன் மருத்துவ மையம், கர்நாடக சுகாதார துறைக்கு உட்பட்ட ஆயுஷ் துறையின் ஏழு அரங்குகள் இடம் பெற்று இருந்தன. அரங்குளில் சித்தா, ஆயுர்வேத மருந்துகள் இருந்தன. இயற்கை முறையில் சிகிச்சை பெறுவது பற்றி, அரங்குகளில் இருந்த டாக்டர்கள் பொதுமக்களுக்கு, எடுத்து கூறினர். தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் சார்பில், ஒரு அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு, 20 வகையான மருந்துகள் இருந்தன. மருத்துவ அதிகாரி டாக்டர் மோனிகா உட்பட எட்டு பேர் வந்து இருந்தனர். நிகழ்ச்சி நடந்த இடத்தின் நுழைவாயில் பகுதியில், பலுானால் ஆன, சிவன் சிலை வைக்கப்பட்டு இருந்தது. பிரம்மகுமாரி அமைப்பு சார்பில் பெரிய அரங்கம் அமைக்கப்பட்டு அதற்குள், 12 ஜோதிர்லிங்கம் வைக்கப்பட்டு இருந்தது. கலியுகம், சத்யுகம் பற்றி விளக்கும் வகையில் உருவப்படங்கள் இருந்தன. எட்டு லட்சுமிகளையும் தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருந்ததை பலரும் சிலாகித்தனர். ஓரிடத்தில் மாம்பழ, பலாப்பழ கண்காட்சி நடந்தது.