பதிவு செய்த நாள்
12
ஏப்
2025
10:04
புதுச்சேரி; முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் ஸ்ரீமத் ராமாயண நவாக உபன்யாசம் நடந்து வருகிறது.இறுதி நாளான நேற்று ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் செய்த உபன்யாசம்; தன் வாலில் அரக்கர்கள் வைத்த தீயாலேயே அனுமான் இலங்கையை தீக்கிரையாக்கிவிட்டு, மீண்டும் தன்னைப் பிடிக்க ராவணனால் ஏவப்பட்ட அரக்கர்களை வதம் செய்தான். மகேந்திர மலைக்கு வந்து சீதா பிராட்டி இருந்து திசை நோக்கி வந்தனம் செய்து விட்டு, கண்டேன் சீதையை என்று ஜாம்பவான், அங்கதன் மற்றும் சக வானரர்களிடம் சீதா பிராட்டியை அசோக வனத்தில் கண்ட விவரத்தையும், சீதா பிராட்டி இருந்த நிலையையும் சொன்னார். சீதா பிராட்டியைத் தான் சந்தித்து ராமனின் செய்தியையும், அவன் கொடுத்த கணையாழியையும் சீதாபிராட்டியிடம் கொடுத்த விவரமும், ராமனிடம் சொல்லும்படி பிராட்டி சொன்ன அந்தரங்க செய்தி தவிர, தன்னைச் சந்தித்தற்கு அடையாளமாக ராமனிடம் கொடுக்கும்படி அவள் சூடாமணி கொடுத்த விவரமும் சொன்னார்.
சீதா பிராட்டியைச் சந்தித்து விரைவில், ராமன் தங்களை மீட்டுச் சென்று பட்டாபிஷேகம் நடக்கும் என் ஆறுதல் சொல்லி, கடலைக் கடந்து தற்போது உங்கள் முன் சீதையின் துாதனாக வந்து நிற்கின்றேன் என, ஒரே மூச்சில் அனுமன் சொன்னான். அனுமன் வெற்றி வீரனாகத் திரும்பியதைக் கண்டு வானரர்கள் ஆனந்தப்பட்டுக் குதித்தனர். தகவல் அறிந்த சுக்கீவன், ராமனுக்கு நம்பிக்கை சொல்லி, மதுவனத்தில் உள்ள வானரர்களை உடனே அழைத்து வாருங்கள் என்று தன் காவலர்களுக்கு உத்திரவிட்டான். வானரங்களுடன் ஹனுமன் சுக்ரீவனின் சபையை அடைந்தார். எப்போதும் ஸ்ரீ ராமனுக்கே முதலில் வந்தனம் சொல்லும் ஹனுமான், முதலில் பிராட்டி இருந்து திசை நோக்கி வணங்கிவிட்டு, பிறகு ராம, சுக்ரீவர்களை வணங்கி ‘கண்டேன் சீதையை’ என்று சொல்லி, கற்புக்கனலாக அவள் இருக்கும் நிலையையும், சொன்ன விவரங்களைச் சொல்லி சூடாமணியை ராமனிடம் சமர்ப்பித்தார். சீதாபிராட்டி ராமனின் கணையாழி பெற்றபோது இருந்த அதே நிலையில் ராமன் சீதப்பிராட்டியின் சூடாமணியப் பெற்றதும் தன் தேவியையே பார்த்தது போல் பரவசப் பட்டு கண்ணீர் மல்கினான். அனுமான் சீதாபிராட்டி இருந்த நிலையைச் சொல்லி, அவள் சொல்லிய அனைத்தையும் சொன்னார்.
சூடாமணியைப் பெற்ற ராமன் ஆனந்த பாஷ்பம் பெருக அதை தன் மார்பில், வைத்துக் கொண்டார். இப்படிப்பட பராக்ரமமான நல்ல காரியம் பண்ணின அனுமானுக்கு என்ன பிரதி உபகாரம் பண்ணுவேன் என்று தாபப்பட்டு, எழுந்து அனுமனை நெஞ்சோடு ஆரத் தழுவிக் கொண்டார். ராமதுாதனாக இலங்கைக்குச் சென்ற அனுமனுக்குக் கிடைத்தது வாலில் நெருப்பு எனும் பரிசு. ஆனால், காருண்ய லட்சுமியான சீதாப் பிராட்டியின் சூடாமணியைப் பெற்று சீதா துாதனாக வந்த அனுமக்குக் கிடைத்தது ராமபிரானின் ஆலிங்கனம். இந்த அளவிலே சுந்தர காண்டம் பூர்த்தியாகிறது. இவ்வாறு அவர் உபன்யாசம் செய்தார்.