பதிவு செய்த நாள்
15
ஏப்
2025
05:04
ராம்நகர் மாவட்டம் கனகபுராவின் கப்பாலு கிராமத்தில் அமைந்து உள்ளது ஸ்ரீ கப்பாலம்மா கோவில். இங்கு சக்தி, ‘கப்பாலம்மா’வாக வீற்றிருக்கிறார். புராணங்கள்படி, ‘கப்பாலம்மா அவதாரம் எடுத்த சக்தி, பூலோகத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க கப்பாலு வந்தார். இக்கிராமத்திலேயே தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்க, பசவேஸ்வரரிடம் அனுமதி பெற்றார். அவரின் அனுமதியை அடுத்து, இங்கே குடி கொண்ட கம்பாலம்மாவுக்கு துணையாக நந்தியும் உடனிருந்தார்’ என்று வரலாறு கூறுகிறது. இக்கோவில் எந்த நுாற்றாண்டை சேர்ந்தது என்ற கல்வெட்டு எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், மிகவும் பழமை வாய்ந்த கோவில் என்று அக்கிராமத்தினர் கூறி வருகின்றனர். திராவிட கட்டட கலையை கொண்ட இக்கோவில், 2015ல் சீரமைக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட்டது.
கோவில் பின்னால், மரத்திலான சிலை இருந்தது. இச்சிலை தற்போது கருவறைக்கு பின், பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டு உள்ளது. கோவில் சீரமைக்கப்பட்டபோது, புதிதாக கம்பாலம்மா சிலை வடிவமைக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டது. அமர்ந்த நிலையில் நந்தி சிலை உள்ளது. கம்பாலம்மாவை தரிசிப்பதால், தங்கள் மீது உள்ள கண் திருஷ்டி போவதாக பக்தர்கள் நம்புகின்றனர். ஒவ்வொரு அமாவாசை அன்றும் பல கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து, சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவில் தினமும் காலை 6:00 முதல் 10:00 மணி வரையிலும்; மாலை 4:00 முதல் இரவு 8:00 மணிவரையிலும் திறந்திருக்கும். – நமது நிருபர் –