மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவில் சித்த குரு பீடம் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2025 05:04
புதுச்சேரி; மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள தட்சணாமூர்த்தி மற்றும் 18 சித்த பீடத்திற்கு இன்று மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது.
புதுச்சேரி – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை மொரட்டாண்டியில் சனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் புதிதாக அமைக்கப்பட்ட 9 அடி உயர தட்சணாமூர்த்தி சுவாமி, 6 அடி உயரமுள்ள 18 சித்தர்கள், 27 நட்சத்திரம், 12 ராசி பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் சித்த குரு பீடத்திற்கு இன்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கான பூர்வாங்க பூஜை, கடந்த 14ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. அன்று மாலை யாக சாலை பூஜை நடந்தது. மறுநாள் காலை சிறப்பு பூஜைகளை தொடர்ந்து புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமிகளுக்கு கண் திறக்கப்பட்டது. தொடர்ந்து, 2ம் கால யாக பூஜை, மாலை 3ம் கால யாக பூஜை, மகா பூர்ணாஹூதி, சோடச உபசார பூஜைகள், மகா தீபாராதனை மற்றும் மங்கல ஆரத்தி நடந்தது. இன்று 16ம் தேதி காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, மகா பூர்ணாஹூதியை தொடர்ந்து கடம் புறப்பாடாகி தட்சணாமூர்த்தி மற்றும் 18 சித்தர்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அனைத்து குருமார்களுக்கும் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.