பதிவு செய்த நாள்
29
ஏப்
2025
01:04
பலரும் ஷீரடி சாய்பாபா கோவில் போக வேண்டும் என ஆசைப்பட்டிருப்போம். ஆனால், வேலை, பணம், விடுமுறை கிடைக்காதது போன்ற சில காரணங்களால், செல்ல முடியாத நிலை உருவாகி இருக்கும். அதற்காக, கவலைப்பட வேண்டாம், விக்டோரியா லே – அவுட் பகுதியில் உள்ள சக்தி வாய்ந்த ஸ்ரீ சாய்பாபா கோவிலுக்கு சென்று மனம் நிறைவாக வழிபடலாம்.
பெங்களூரு, விக்டோரியா லே அவுட், எல்லகொண்டா பாளையாவில் ஷீரடி சாய்பாபா மற்றும் கிருஷ்ணர் கோவில் உள்ளது. இது சாய்பாபா, கிருஷ்ணபகவான் இருவருக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டது. கோவில் சிறியதாகவும், துாய்மையாகவும் காட்சி அளிக்கிறது. கோவில் சிறியதாக இருந்தாலும், பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக, வாரந்தோறும் குறிப்பிட்ட நாட்களில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தருகின்றனர்.
சாய்பாபா மற்றும் கிருஷ்ணபகவான் இரண்டு பேருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. இவர்களை தவிர சாந்தோஷி மாதா மற்றும் மஞ்சுநாத சுவாமிகளுக்கும் சிறிய சன்னிதிகள் உள்ளன. கோவிலில் ஒரு நாளைக்கு மூன்று வேளை அன்னதானம் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் உணவு உண்பதற்கான இடம், குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.
பக்தர்கள் பலரும் இறைவனுக்கு பல விதங்களில் காணிக்கை வழங்குகின்றனர். இந்த கோவிலில் அளிக்கப்படும் காணிக்கைக்கு, வருமானவரியில் விலக்கு பெற்று கொள்ளலாம். காலை 5:45 மணி முதல் மதியம் 12:45 மணி வரையும்; மாலை 5:30 மணி முதல் இரவு 8:45 மணி வரையும் கோவில் திறந்திருக்கும். வியாழன், ஞாயிறு போன்ற கிழமைகளில் பூஜைக்கு ஏற்ப நேரம் மாறுபடும். கோவிலில் நிலவும் அமைதியான சூழல் காரணமாக பலரும் வருகை தருகின்றனர்.