பதிவு செய்த நாள்
05
மே
2025
10:05
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் சங்கரமடத்தின் மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளையமடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரும், விஜய யாத்திரையாக நேற்று காலை, திருப்பதி சங்கமடத்திற்கு சென்றனர்.
காஞ்சிபுரம் சங்கரமடத்தின் 71வது மடாதிபதியாக சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், கடந்த 30ம் தேதி பொறுப்பேற்றார். கடந்த 1ம் தேதி, பட்டின பிரவேசமாக காமாட்சியம்மன் கோவிலில் இருந்து, தேனம்பாக்கம் சிவாஸ்தானம் பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு சென்றார். அன்று இரவு தேனம்பாக்கம் சிவாஸ்தானத்தில் தங்கிய இளையமடாதிபதி மறுநாள் அதிகாலை காஞ்சிபுரம் சங்கரமடத்திற்கு வந்தார். சங்கரமடத்தில் ஆதிசங்கரர் ஜெயந்தி உத்சவத்தை சங்கரமடத்தின் மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரும், மஹா சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில் சிறப்பு பூஜை செய்தனர். நேற்று முன்தினம், காஞ்சி காமாட்சி சங்கர மட வரவேற்பு குழுவினர், மடாதிபதிகள் இருவருக்கும் பூரணகும்ப மரியாதையுடன், மலர்மாலை, மலர்கீரிடமும் வழங்கினர். தொடர்ந்து மடாதிபதிகள் இருவரும் வரவேற்பு குழுவினருக்கு ஆசி வழங்கினர். இந்நிலையில், காஞ்சிபுரம் சங்கரமடத்தின் மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளையமடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரும் விஜய யாத்திரையாக நேற்று காலை திருப்பதியில் உள்ள சங்கரமடத்திற்கு புறப்பட்டு சென்றனர். திருப்பதி சங்கரமடத்தில் முகாமிட்டுள்ள சுவாமிகள் இருவரும் பக்தர்களுக்கு ஆசி வழங்க உள்ளனர் என, காஞ்சிபுரம் சங்கரமடம் வட்டாரத்தினர் தெரிவித்தனர்.