பதிவு செய்த நாள்
05
மே
2025
10:05
சென்னை; ஸ்ரீசத்ய சாய் சேவா தமிழக அமைப்புகள் சார்பில், பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழா, சென்னையில் நேற்று கோலாகலமாக நடந்தது. தமிழ்நாடு ஸ்ரீ சத்ய சாய் பிரேம ரதம் எனும் மாபெரும் ரத யாத்திரை, பெரம்பூர், ஸ்ரீசத்ய சாய் நிவாஸில், காலை 9:00 மணிக்கு துவங்கியது. அங்கு, சுவாமிக்கு பூர்ணகும்பம், பல்லக்கு சேவை மற்றும் பஜனையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு, ஸ்ரீசத்ய சாய் பிரேம ரதத்தை, ஸ்ரீசத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் அறங்காவலர் மோகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பெரம்பூர் சாய் நிவாஸில் இருந்து புறப்பட்ட ரதம், ஐ.சி.எஸ்., அண்ணா நகர் சாய் சரணம், தி.நகர் சாய் புஷ்பாஞ்சலி வழியாக பயணித்து, ராஜா அண்ணாமலைபுரம், சுந்தரம் சாலை, ‘சுந்தரம்’ என்ற இடத்தில் இரவு 7:00 மணிக்கு நிறைவடைந்தது. இந்த மேஹாத்ஸவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று, ஸ்ரீசத்ய சாய்பாபாவின் ஆசிகளை பெற்றனர். இந்த ஆன்மிக பவனி, சாய்பாபாவின் நுாற்றாண்டு விழாவின் ஒரு முக்கிய நிகழ்வாகும். உலகளாவிய அன்பும், சேவையும் பற்றிய சாய் பாபாவின் செய்தியை மக்களிடம் பரப்பும் வகையில், சென்னையின் பல இடங்களில் இந்த ரத யாத்திரை பயணித்தது.