கீழடியில் உலக நன்மை வேண்டி வேம்பு, அரச மரங்களுக்கு திருமணம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மே 2025 03:05
கீழடி; கீழடியில் உலக நன்மை வேண்டி வேம்பு, அரச மரங்களுக்கு திருமணம் நடத்தப்பட்டது. பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்த போது கீழடியில் தங்கியிருந்தாக கருதப்படுகிறது. கீழடியில் அவர்கள் வழிப்பட்ட சிவன் அர்ச்சுன லிங்கேஷ்வரர் என அழைக்கப்படுகிறது. இங்கு உலக நன்மை வேண்டி சிவன் வடிவமான அரச மரத்திற்கும், சக்தி வடிவமான வேம்பு மரத்திற்கும் திருமணம் நடத்த முடிவுசெய்யப்பட்டது. காலை ஏழு மணி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கின. அரச மரத்திற்கு வேஷ்டியும் , வேம்பு மரத்திற்கு புதிய சேலையும் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. அரச மரம் சார்பாக கணேச பட்டரும், வேம்பு சார்பாக மலையப்ப பட்டரும் காப்பு கட்டி மாலை மாற்றி கொண்டனர். காலை 9:20 மணிக்கு வேம்பு மரத்திற்கு கணேச பட்டர் திருமாங்கல்யம் அணிவித்தார். பின் பெண் பக்தர்கள் திருமாங்கல்ய கயிற்றை புதிதாக மாற்றி கொண்டனர். கீழடி மற்றும் சுற்றுவட்டார கிராமமக்கள் ஏராளமானோர் திருமண நிகழ்வில் பங்கேற்றனர். திருமண விருந்து வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை ஞானப்பிரகாசம் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.