மதுரை சித்திரை திருவிழாவில் தேரோட்டம் கோலாகலம்; மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசித்து பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2025 07:05
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் தேரோட்டம் துவங்கியது. தேரில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் எழுந்தருள பக்தர்கள் வடம் பிடித்தனர்.
மதுரை சித்திரைத் திருவிழா ஏப்.,29ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 6ல் அம்மனுக்கு பட்டாபிஷேகமும், நேற்றுமுன்தினம் திக்குவிஜயமும் நடந்தது. திருவிழாவின் 10ம் நாள் நிகழ்வாக நேற்று திருக்கல்யாணம் நடந்தது. பெற்றோர் திருமணத்தை காண திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி, தெய்வானை, தாரை வார்த்து கொடுக்க பவளகனிவாய் பெருமாளும் எழுந்தருளினர். திருமண சடங்குகளை அம்மன் சார்பில் சண்முகசுந்தரம் பட்டரும், சுவாமி சார்பில் கார்த்திக் பட்டரும் செய்தனர். தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்றது. தேரில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் எழுந்தருள ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர்.