பதிவு செய்த நாள்
09
மே
2025
07:05
அழகர்கோவில்; மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மே 12ல் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக தங்கக்குதிரை வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம் அழகர்கோவிலில் இருந்து மதுரை வந்தன.
கள்ளழகர் சித்திரை திருவிழா மே 8 முதல் 17 வரை நடக்கும்.ஏப். 27ல் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் முகூர்த்தகால் நடப்பட்டது. நேற்றும் இன்றும் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு பூஜை, தோளுக்கினியான் நிகழ்வு நடக்கும். கள்ளழகர் மலையிலிருந்து புறப்படும் தங்கப்பல்லக்கிற்கும் முக்கிய நிகழ்வுகளில் எழுந்தருளும் வாகனங்களுக்கும் பாலீஷ் செய்து தயாராக வைக்கப்பட்டன. தங்கக் குதிரை வாகனம் நேற்று காலை மலையிலிருந்து புறப்பட்டு தல்லாகுளம் வந்தது. சேஷவாகனம் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலிலும், கருட வாகனம் தேனுார் மண்டபத்திலும் டிராக்டர்களில் எடுத்துச் செல்லப்பட்டு இறக்கிவைக்கப்பட்டன. சித்திரை திருவிழாவிற்காக மட்டுமே கள்ளழகர் இந்த வாகனங்களில் எழுந்தருளுவார்.
ரோடுகள் சீரமைக்கப்படுமா; கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தின் அருகே செல்லுார் நோக்கி செல்லும் வடகரை ரோடு மோசமாக உள்ளது. குறிப்பாக ஏ.வி., பாலத்தின் கீழ் பகுதியில் வாகனங்கள் தடதடத்துச் செல்கின்றன. இப்பகுதியில் ரோட்டை சமப்படுத்த வேண்டும். ஆழ்வார்புரம், செனாய் நகர் சந்து பகுதிகளிலும் ரோட்டை சரிசெய்வது நல்லது. இதேபோல் அண்ணாநகர், தாசில்தார் நகர், சதாசிவநகர், வண்டியூர் பகுதியில் அணுகு ரோடுகள் மோசமாகவே உள்ளன. பக்தர்கள் நலன்கருதி மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை சீரமைக்க வேண்டும்.
மே 12 வைகையில் இறங்குகிறார் கள்ளழகர்; அழகர்கோவில் சித்திரைத்திருவிழா நேற்று ஆரம்பமானது. நாளை (மே 10) மாலை 6:00 மணி முதல் 6:15 மணிக்குள் கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார். மே 11ல் மூன்று மாவடியில் அவரை பக்தர்கள் வரவேற்கும் எதிர்சேவை நடக்கிறது. மே 12ல் அதிகாலை 5:45 மணி முதல் 6:05 மணிக்குள் வைகையாற்றில் லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் தங்கக்குதிரை வாகனத்தில் வைகையில் எழுந்தருளுகிறார். மதியம் ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி உற்ஸவம் நடக்கிறது. இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் எழுந்தருளுகிறார்.மே 13 காலை சேஷ வாகனத்தில் புறப்பட்டு வைகையாறு தேனுார் மண்டபம் வருகிறார். மதியம் கருடவாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடக்கிறது. மே 14 மதியம் அனந்தராயர் பல்லக்கில் சேதுபதி மண்டபத்திற்கு புறப்படுகிறார். இரவு பூப்பல்லக்கில் அழகர்கோவிலுக்கு புறப்படுகிறார். மே 16 காலை 10:00 மணி முதல் 10:25 மணிக்குள் இருப்பிடம் சேருகிறார்.