பதிவு செய்த நாள்
09
மே
2025
08:05
அவிநாசி; "தென்னாடுடைய சிவனே போற்றி "என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி கோஷம் முழங்க அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் பெரிய தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொறுப்படுத்தாது,நான்கு மணி நேரமாக ஏராளமான பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து இழுத்தனர். கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதும், சுந்தரமூர்த்தி நாயனார் பாடல் பெற்றதுமான சிறப்புடையதாகவும், ஆசியாவில் மூன்றாவது பெரிய தேர் என்ற பெருமை கொண்டதாகவும் விளங்கும் திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் பெரிய தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த ஆண்டு சித்திரை தேர் திருவிழா மே 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான பஞ்ச மூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி கடந்த 5ம் தேதி நடந்தது. கடந்த 6ம் தேதி கற்பகவிருட்சம் காட்சி, திருக்கல்யாணம், வெள்ளை யானை வாகனத்தில் ஸ்ரீ ஆனந்தவல்லி தாயாருடன் ஸ்ரீ சந்திரசேகர பெருமான் எழுந்தருளி காட்சியளித்தார். நேற்று பெரிய தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுக்க கோலாலமாக நடைபெற்றது.தேரில் சோமாஸ்கந்தர் எழுந்தருளி காட்சியளித்தார். காலை 10 மணியளவில் பெரிய தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மதியம் 2: 10 மணியளவில் தேர் மேற்கு ரத வீதியில் நிறுத்தப்பட்டது. இன்று மீண்டும் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி வழியாக மீண்டும் தேர் நிலை நிறுத்தப்படும். தேர் ரத வீதிகளில் ஆடி அசைந்தவாறு வருவதைக் கண்ட பக்தர்கள் ஏராளமானோர் அரோகரா "ஓம் நமச்சிவாயா தென்னாடுடைய சிவனே போற்றி" எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என விண்ணதிர கோசம் எழுப்பினர். காலை முதலே கடும் வெயில் சுட்டெரித்த போதும் நான்கு மணி நேரம் பக்தி பெருக்குடன் காத்திருந்த பக்தர்களின் கூட்டத்தின் நடுவில் தேர் மிதந்து வந்தது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ், குமார்,திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ், போலீஸ் எஸ்.பி.,கிரிஸ் அசோக் யாதவ்,அவிநாசி கோவில் அறங்காவலர் குழு தலைவர் பாப்பீஸ் சக்திவேல்,இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் துணை ஆணையர் (நகை சரிபார்ப்பு) ஹர்ஷினி,கோவில் செயல் அலுவலர் சபரீஷ் குமார்,அவிநாசி தாசில்தார் சந்திரசேகர் மற்றும் அறங்காவலர்கள் பங்கேற்றனர். நாளை காலை அம்மன் தேர் எனப்படும் சின்னத்திரை வடம் பிடித்து இழுத்து நிலை நிறுத்தப்படும். தேர் விழாவின்போது ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவிநாசி மற்றும் சேவூர் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவக் குழுவினர் முகாம்கள் அமைத்திருந்தனர். தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர், ஆம்புலன்ஸ் வாகனங்கள், மொபைல் டாய்லெட் என அடிப்படை வசதிகளை பக்தர்களுக்காக செய்திருந்தனர்.