பதிவு செய்த நாள்
14
மே
2025
10:05
திருவொற்றியூர்; கடும்பாடி அம்மன் கோவில், தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். திருவொற்றியூர், காலடிப்பேட்டை, வன்னியர் தெரு – கடும்பாடி அம்மன் கோவில் பிரசித்திப் பெற்றது. இங்கு, ஆண்டுதோறும், சித்ரா பவுர்ணமியையொட்டி, அக்னி வசந்த மஹா உத்சவம் நடக்கும். அதன்படி, 19ம் ஆண்டு திருவிழா, 2 ம் தேதி பந்தக்கால் நடும் நிகழ்வுடன் துவங்கியது. தொடர்ந்து, 8ம் தேதி, கங்கை திரட்டுதல், காப்பு கட்டுதல், கணபதி பூஜை, தினசரி கரகம் புறப்படுதல் நிகழ்வுகள் நடந்தன. நேற்று முன்தினம் காலை, பால்குட ஊர்வலம் நடந்தது. முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா, நேற்று முன்தினம் இரவு நடந்தது. திருவொற்றியூர் – வடிவுடையம்மன் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் அருளாடி, வீதி உலா வந்தனர். பின், கடும்பாடி அம்மன் கோவில் அருகே, தயாராக இருந்த அக்னி குண்டத்தில் இறங்கி, தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். தொடர்ந்து, அம்மன் புஷ்ப அலங்காரத்தில், சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். நேற்று, மஞ்சள் நீர் விடையாற்றி மற்றும் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவ சேவையுடன், திருவிழா நிறைவுற்றது.