பரமக்குடியில் சாப விமோசனம் அளித்த கள்ளழகர்; சேஷ வாகனத்தில் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2025 10:05
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், சேஷ வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளித்தார்.
பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், நேற்று முன்தினம் அதிகாலை 3:20 மணிக்கு கள்ளழகர் பூப்பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்கினார். தொடர்ந்து தல்லாகுளத்தில் சேர்க்கையாகிய பெருமாள், காலை 9:00 மணிக்கு குதிரை வாகனத்தில் அலங்காரமாகினார். பின்னர் மகா தீபாராதனைகள் நடந்து காலை 9:35 மணிக்கு தல்லாகுளத்தில் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விரதம் இருந்த பக்தர்கள் மஞ்சள் நீரை பீய்ச்சி அடித்து அழகரை வரவேற்றனர். தொடர்ந்து நேற்று அதிகாலை 3:00 மணிக்கு வண்டியூர் பெருமாள் கோயிலை அழகர் அடைந்தார். அதேபோல் வைகை ஆற்று மணலில் 3 கிலோ மீட்டர் தூரம் ஆயிரம் பொன் சப்பரத்தை இழுத்து வண்டியூரை அடைந்தனர். நேற்று மாலை 5:00 மணிக்கு கள்ளழகர் சேஷ வாகனத்தில் அலங்காரமாகினார். அப்போது மகா தீபாராதனைகள் நடந்து, மாலை 6:00 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்டு வைகை ஆற்றை நோக்கி மீண்டும் கிளம்பினார். அங்கு மட்டா மண்டகப்படியில் அழகர் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் வழங்கினார். தொடர்ந்து இரவு 10:00 மணிக்கு வாணியர் மண்டகப்படியில் விடிய விடிய தசாவதாரம் நடந்தது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்தனர்.