பதிவு செய்த நாள்
18
மே
2025
01:05
திருவாலங்காடு: திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இங்கு தினமும் 100 பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
வாரந்தோறும் சனிக்கிழமை மாந்தீஸ்வரர் பரிகார பூஜைக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
எனவே, சனிக்கிழமை 2,000 – 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வருவதால், மதிய நேரம் வழங்கப்படும் அன்னதானம், கூடுதல் பக்தர்களுக்கும் வழங்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். ஹிந்து அறநிலையத் துறை ஆணையரின் உத்தரவுப்படி, வாரந்தோறும் சனிக்கிழமை 500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க கோவில் நிர்வாகம் தீர்மானித்து, திட்டம் துவக்கப்பட்டது.
இத்திட்டத்தை, திருத்தணி முருகன் கோவில் இணை ஆணையர் ரமணி, நேற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். உடன், வடாரண்யேஸ்வரர் கோவில் மணியம் கார்த்திகேயன், தலைமை குருக்கள் சபாபதி உள்ளிட்ட பலர் இருந்தனர்.