ஐந்து ஆண்டுகளுக்கு பின் கைலாஷ் – மானசரோவர் யாத்திரை : 750 பேர் தேர்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2025 10:05
புதுடில்லி; ஐந்து ஆண்டுகளுக்கு பின் துவங்கும் கைலாஷ் – மானசரோவர் யாத்திரைக்கு, 750 பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இமய மலைத்தொடரில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதியில் அமைந்துள்ள கைலாய மலைக்கு ஹிந்துக்கள் ஆண்டுதோறும் புனித பயணம் செல்வது வழக்கம். கடந்த, 1981ல் இந்தியா -– சீனா இடையிலான ஒப்பந்தத்தின்படி துவங்கப்பட்ட இந்த யாத்திரை, 2020ல் கொரோனா பேரிடர் மற்றும் எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தால் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு, பிரதமர் மோடிக்கும், சீன அதிபர் ஷீ ஜின்பிங்கிற்கும் இடையே நடந்த பேச்சுக்கு பின், இந்த ஆண்டு மீண்டும் யாத்திரை துவங்குகிறது. ஜூன் முதல் ஆகஸ்ட் வரை நடக்கும் யாத்திரைக்காக, 5,561 பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்திருந்தனர். நியாயமான தேர்வுக்காக, நம் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், கணினிமயமாக்கப்பட்ட குலுக்கல் நடத்தினார். இதில் 750 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், உத்தரகண்டின் லிபுலேக் கணவாய் மற்றும் சிக்கிமின் நாது லா கணவாய் வழியாக பல்வேறு குழுக்களாக பயணிக்க உள்ளனர்.