பதிவு செய்த நாள்
24
மே
2025
10:05
காஞ்சிபுரம்; விடையாற்றி உத்சவத்தின் நிறைவு நாளான நேற்று, ஸ்ரீதேவி, பூதேவியருடன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி வரதராஜ பெருமாள் வீதியுலா வந்தார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொடந்து, 10 நாட்கள் நடந்த உற்சவத்தில் வரதராஜ பெருமாள் தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பல்வேறு வீதிகள் வழியாக வீதியுலா சென்று வந்தார். வைகாசி பிரம்மோற்சவம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, கடந்த இரு நாட்களாக விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. விழாவில் பெருமாள் திருவடிகோவில் புறப்பாடு நடந்தது. இதில் காலை, 11:00 மணிக்கு, நுாறுகால் மண்டபத்தில் எழுந்தருளிய பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், திருமஞ்சனம் நடந்தன. விடையாற்றி உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று மாலை புஷ்ப பல்லக்கு உற்சவம் நடந்தது. இதில், அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், சன்னதி தெரு, குறுக்கு தெரு, அண்ணா தெரு, நான்கு மாட வீதி, ஆணை கட்டி தெரு வழியாக வீதியுலா சென்று மீண்டும் சன்னதி வந்தடைந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீப ஆராதனை காண்பித்து சுவாமியை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.