காரைக்கால்: மழை வேண்டி திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் நந்திக்கு வர்ண ஜப பூஜை நடந்தது. காரைக்கால் மாவட்டம் காவிரியின் கடை மடைப்பகுதியில் உள்ளது. பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் தண்ணீர் வரததால், காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா நெல் கருகி வருகிறது. நந்திகேஸ்வரருக்கு வருண ஜப பூஜை செய்தால் மழை பெய்யும் என்ற ஐதீகத்தின்படி திருநள்ளார் கோவிலில் வருண ஜப பூஜை செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக, திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் தர்பாரண்யேஸ்வரர் நேர் எதிரே சங்கு மண்டபத்தில் அருள்பாலிக்கும் நந்திகேஸ்வரர் சிலையைச் சுற்றி உருவாக்கிய தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டது. வருண ஜபம் விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. பூன்யாவாஜனம் நடத்தி நந்திகேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து கலசாபிஷேகம் நடத்தி, வருண ஜபம் செய்யப்பட்டது. பூஜையில் தர்மபுர ஆதீனம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் கலந்து கொண்டார். கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜவீராசாமி கூறுகையில், வறட்சி நீங்கி பயிர்கள் செழித்து விவசாயம் வளம்பெறவும், உலக நன்மை வேண்டி பூஜை நடந்தது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இது போல் பூஜை செய்தபின் மழை பெய்த பயிர்கள் செழிப்பானது. அதைக்கருத்தில் கொண்டே பூஜை நடத்தப்பட்டது என்றார்.