கடையநல்லூர்: பண்பொழி திருமலைக் கோயிலில் மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ள நிலையில் உண்டியல் வசூல் 2லட்சத்து 37ஆயிரத்து 553 ரூபாய் கிடைத்துள்ளது. இந்த உண்டியல் வசூல் அறநிலையத்துறை, நிர்வாகத்திற்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடையநல்லூர் பண்பொழி திருமலைக் கோயிலில் சுமார் 5கோடி ரூபாய் செலவில் மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மலைப்பாதைகளில் பக்தர்களின் வசதிக்காக மின்விளக்கு வசதிகள் ரூ. 37 லட்சம் செலவில் அமைத்திட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பண்பொழி திருமலைக்கோயில் உதவி ஆணையர் கார்த்திக், முன்னாள் திருப்பணிக்குழு தலைவர் அருணாசலம், கோயில் தக்கார் கண்ணதாசன் மற்றும் உபயதாரர்கள், மண்டகப்படிதாரர்கள் ஏற்பாட்டின்படி தற்போது தங்கத் தேர் அமைப்பதற்கான நடவடிக்கைகளும் அறநிலையத்துறை நிர்வாக ஒத்துழைப்போடு நடந்து வருகிறது. தொடர்ந்து சுமார் ரூ. 10லட்சம் செலவில் கோயில் வளாகத்தில் புனரமைப்பு செய்யும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. இதனிடையில் மலைப்பாதை அமைக்கப்பட்டதை தொடர்ந்து கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். தற்போது ஐயப்ப பக்தர்கள் கூட்டமும் கோயிலுக்கு அதிகளவில் வருகிறது. கோயிலில் 45 நாட்கள் முடிவடைந்த நிலையில் உண்டியல் காணிக்கை பணம் உதவி ஆணையர் கண்ணதாசன், தூத்துக்குடி உதவி ஆணையர் செல்லத்துரை ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டன. இதன் மூலம் 2 லட்சத்து 37ஆயிரத்து 553 ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளது. மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கோயிலுக்கு உண்டியல் மூலமாக கிடைக்கும் காணிக்கை வசூல் அதிகரித்து வருவதால் அறநிலையத்துறை, கோயில் நிர்வாகத்தினர் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.