பதிவு செய்த நாள்
18
டிச
2012
11:12
மன்னார்குடி: ராஜகோபாலசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து விழா துவங்கியது.வைணவ ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப்பெற்றதும், தென்துவாரகை என்றும், தென்திருப்பதி என்றும் அழைக்கப்படும், மன்னார்குடி வித்ய ராஜகோபாலஸ்வாமி கோவில் பல சிறப்புக்கள் பெற்று விளங்குகிறது.12 திங்களும் விழா காணும் ஒரே திருத்தலம் இக்கோவிலாகும். முப்பது நாட்கள் நடக்கும் பங்குனிப் பெருவிழாவை அடுத்து, மார்கழி திங்களில் நடக்கும் அத்யாயன உற்சவம் என்றழைக்கப்படும் வைகுண்ட ஏகாதசி எனும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி பகல் பத்து, ரா பத்து என கொண்டாடப்படுகிறது.சொர்க்க வாசல் திறப்பு வரும், 24ம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு நடக்கிறது. இத்திருக்கோவில் சுற்றுலாத்தலத்துடன் இணைக்கப்பட்டதால், இந்நிகழ்ச்சியைக் காண வெளி மாநிலத்தவர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர், முன்தினமே கோவிலுக்கு வந்து, கிருஷ்ண தீர்த்தத்தில் நீராடி தரிசனம் பெற்றுச்செல்வது குறிப்பிடத்தக்கது.சொர்க்கவாசல் திறப்புக்கு, 75 ஆயிரம் பக்தர்கள் வருகை தரலாம் என்பதால், பக்தர்களின் நலன்கருதி சுகாதாரம், கழிப்பிட வசதி, குடிநீர், அன்னதானம் ஆகிய பணிகளை கோவில் செயல்அலுவலர் ஜெயராமன் தலைமையில் திருக்கோவில் அலுவலர்கள் சிறப்பாக ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மன்னார்குடி டி.எஸ்.பி., அன்பழகன் தலைமையில் போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.