மானாமதுரை; இடைக்காட்டூரில் உள்ள திரு இருதய ஆண்டவர் சர்ச் 131ம் ஆண்டு திருவிழாவை யொட்டி மின் அலங்கார தேர் பவனி நடந்தது. இந்த ஆண்டிற்கான திருவிழா ஜூன் 27ம் தேதி மாலை 6:00 மணிக்கு மறை மாவட்ட முதன்மை குரு அருள் ஜோசப் தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. சர்ச் வளாகத்தில் அருள் பணியாளர் ஜான் வசந்தகுமார் தலைமையிலும் பாதிரியார்கள் முன்னிலையிலும் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர். மின் அலங்கார தேர் பவனி விழா நேற்று நடந்தது. காலை 11:00 மணிக்கு சிவகங்கை மறைமாவட்ட ஆயர் லுார்து ஆனந்தம் தலைமையிலும், மாலை 6:00 மணிக்கு முன்னாள் மறைமாவட்ட ஆயர் சூசை மாணிக்கம் தலைமையில் திருவிழா நிறைவு திருப்பலி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இயேசுவின் சொரூபம் வைக்கப்பட்டிருந்த மின் அலங்கார தேர் இடைக்காட்டூரில் உள்ள வீதிகளின் வழியே வலம் வந்தது. இன்று 5ம் தேதி மாலை 6:00 மணிக்கு நற்கருணை பெரு விழா நடைபெற உள்ளது.