திருத்தணியில் காவடிகளுடன் குவிந்த பக்தர்கள்; திருக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் ஏமாற்றம்
பதிவு செய்த நாள்
18
ஜூலை 2025 05:07
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலுக்கு இன்று காவடிகளுடன் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். சரணவபொய்கை என்கிற திருக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத்திருவிழா முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. ஐந்து நாட்கள் நடக்கும் விழாவில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் வந்து, மலையடிவாரத்தில் உள்ள சரவணபொய்கை குளத்தில் புனித நீராடிய பின், காவடிகள் வைத்து சிறப்பு பூஜை நடத்துவர். அதன்பின், காவடிகளுடன் மலைப்படிகள் வழியாக பக்தி பாடல்கள் பாடியும், பம்பை, உடுக்கை, சிலம்பாட்டத்துடன் மலைக்கோவிலுக்கு செல்வர். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக, ஆடிக்கிருத்திகை விழாவின் போது கூட்ட நெரிசல் மற்றும் மூலவரை தரிசிக்க முடியாது என்பதால், பெரும்பாலான பக்தர்கள் ஆடி மாதம் பிறந்ததும், தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற மயில், மலர் மற்றும் பால் காவடிகளுடன் வந்து மூலவரை தரிசித்து வருகின்றனர். நடப்பாண்டிற்கான ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத்திருவிழா, வரும் 14ம் தேதி துவங்கி, 18ம் தேதி வரை நடக்கிறது. நேற்று முன்தினம் ஆடி மாதம் பிறந்ததால், முருகன் கோவிலுக்கு காவடிகளுடன் பக்தர்கள் அதிகளவில் வந்து தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை 5:00 மணிக்கே திருப்பத்துார், வாணியம்பாடி, ஆரணி, வேலுார் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளுடன், சரவணபொய்க்கை குளத்திற்கு வந்தனர். குளத்தில் தண்ணீர் இல்லாததால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பின், குளத்திற்கு வெளியே காவடிகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தி, மலைக்கோவிலுக்கு சென்றனர். குளத்தில் தண்ணீர் இல்லாததால், சில பக்தர்கள் அருகே உள்ள தனியார் திருமண மண்டபங்கள், விடுதிகளில் குளித்துவிட்டு, காவடிகளுடன் மலைக்கோவிலுக்கு சென்று வழிபட்டனர். மழையால் குளம் நிரம்பும்; கடந்த மாதம் வரை கோவில் நிர்வாகம் சரவணபொய்கை குளத்தை துார்வாரி சீரமைக்கப்பட்டது. இதனால், குளத்தில் இருந்த தண்ணீரை முழுமையாக வெளியேற்றப்பட்டது. தற்போது மழை பெய்து வருவதால், 3 அடி உயரத்திற்கு மேல் குளத்தில் தண்ணீர் உள்ளது. ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத்திருவிழாவிற்கு, இன்னும், 30 நாட்கள் உள்ளதால், வருண பகவான் துணையுடன் குளம் நிரம்பும். இல்லையெனில், கோவில் நிர்வாகம் லாரிகள், டிராக்டர்கள் மூலம் தண்ணீர் பிடித்து, குளத்தை நிரப்ப முடிவு செய்துள்ளது.
|