சென்னை; ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையான நேற்று, சென்னை, புறநகரில் உள்ள அம்மன் கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆடி மாதம் நேற்று முன்தினம் பிறந்தது. இதில், விசேஷம் வாய்ந்த ஆடி முதல் வெள்ளிக்கிழமையான நேற்று, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னையில் பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன், கோலவிழியம்மன், திருவேற்காடு கருமாரியம்மன், மாங்காடு காமாட்சி அம்மன், திருமுல்லைவாயில் பச்சையம்மன், பிராட்வே காளிகாம்பாள்; மடிப்பாக்கம் பொன்னியம்மன் உள்ளிட்ட கோவில்கள் மட்டுமின்றி சிறு கோவில்களிலும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. சில கோவில்களில் பக்தர்களால் பால்குடம் எடுத்து பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. ஆடி முதல் வெள்ளி முன்னிட்டு, புற்றுக்கு பால் வார்த்து, மாவிளக்கு ஏற்றி பெண்கள் பொங்கலிட்டனர். சிலர், தீச்சட்டி ஏந்தி, அலகு குத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.