சென்னை, புறநகர் பகுதிகளில் ஆடி கிருத்திகை விழா விமரிசை
பதிவு செய்த நாள்
21
ஜூலை 2025 12:07
வடபழனி: சென்னை, புறநகர் பகுதிகளில் நேற்று, ஆடி கிருத்திகை விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வடபழனி முருகன் கோவிலில், நேற்று ஆடி கிருத்திகை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அதிகாலை 4:30 மணிக்கு பள்ளியெழுச்சி பூஜைகள் நடந்தன. இரவு, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் வீதியுலா நடந்தது. நேற்று முழுதும் நடை மூடாமல், தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். திரளாக பங்கேற்ற பக்தர்கள், பால்குடம், காவடி எடுத்து, அலகு குத்தி, தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மதுரவாயல் அருகே, வானகரம் மேட்டுக்குப்பத்தில், மச்சக்கார சுவாமிநாத பாலமுருகன் கோவில் உள்ளது. இங்கு மூலவர், முருகப்பெருமானின் வலது கன்னத்தில், சிவப்பு நிறத்தில் மச்சம் உள்ளது. அதனால் இவரை, மச்சக்கார பாலமுருகன் என, பக்தர்கள் அழைக்கின்றனர். கோவிலில் இருந்து மேள தாள வாத்தியங்களுடன் முருகப்பெருமான் புறப்பட்டு, போரூர் ஓம்சக்தி நகரில் உள்ள சேனியம்மன் கோவிலை அடைந்தார். பக்தர்கள், 108 பால்குடங்களை ஏந்தி வந்து, மூலவருக்கு அபிஷேகம் செய்தனர். முருகசித்தர் ஸ்ரீலஸ்ரீ குருஜி மற்றும் கோவில் நிர்வாகத்தினர், விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர். முருகன் கோவில் மட்டுமின்றி பிற கோவில்களிலும் பால்குட ஊர்வலம், கூழ் ஊற்றுவது என, ஆடி கிருத்திகை விழா களைகட்டியது. குன்றத்துார், வல்லக்கோட்டை, திருப்போரூர், திருத்தணி ஆகிய கோவில்களிலும், பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து, சுவாமியை தரிசித்து சென்றனர். இந்த மாத இறுதியில் மற்றொரு கிருத்திகை வருவதால், அன்றும் முருகன் கோவில்களில் விசேஷ நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.
|