தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் திருப்புகலுார் அக்னீஸ்வரர் கோவில் அகழி
பதிவு செய்த நாள்
21
ஜூலை 2025 12:07
மயிலாடுதுறை; நாகை அருகே வரலாற்று சிறப்பு மிக்க திருப்புகலுார் அக்னீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்த நிலையில், சுற்றுச்சுவர் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டதால், கோவில் அகழியில் தண்ணீர் நிரப்பப்படாமல் வறண்டு கிடக்கிறது. நாகை மாவட்டம், திருப்புகலுாரில் வரலாற்று சிறப்பு மிக்க, வேளாக்குறிச்சி ஆதீனத்திற்கு சொந்தமான கருந்தாழ்குழலி சமேத அக்னீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற, வாஸ்து தலமாக விளங்கி வருகிறது. சுந்தரருக்கு செங்கற்களை பொன் கற்களாக மாற்றி அருளிய, முருக நாயனார் அவதார ஸ்தலமாகவும் திகழ்கிறது. மேலும், இக்கோவில் சதய நட்சத்திரம், தனுசு ராசி பரிகார ஸ்தலமாகவும் உள்ளது. இந்த கோவிலை சுற்றிலும் பாதுகாப்புக்காகவும், பக்தர்கள் நீராடவும், அப்பகுதியில் நீர் ஆதாரம், நிலத்தடி நீர் மேலாண்மை ஆகியவற்றிற்காக 6 ஏக்கர் பரப்பளவில் அகழி அமைக்கப்பட்டுள்ளது. இந்த அகழிக்கு அருகில் உள்ள முடிகொண்டான் ஆற்றில் இருந்து வாய்க்கால் வழியாக தண்ணீர் கொண்டு வந்து சேமித்து, மக்கள் ஆண்டு முழுவதும் பயன்படுத்தி வந்தனர். இந்த அகழியில் நீர் நிறைந்தால் மழை பெய்து, விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த மாதம் 5ம் தேதி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் திருப்பணியின் ஒரு பகுதியாக அகழியில் தேங்கியிருந்த தண்ணீரை அகற்றிவிட்டு சுற்றுச்சுவர் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உபயதாரர்கள் நிதி போதுமான அளவில் கிடைக்காததால் பணி பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் முடிந்து நேற்று மண்டல அபிஷேகம் பூர்த்தி அடைந்த நிலையில், கட்டுமான பணிகள் பாதியில் நிற்பதால் கோவில் நிர்வாகம் அகழிக்கு தண்ணீர் கொண்டு வந்து தேக்காமல் வைத்துள்ளது. இதனால் அகழி முழுமையாக வறண்டு கிடக்கிறது. காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு கிளை நதியான முடிகொண்டான் ஆற்றில் தண்ணீர் விடப்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் உள்ள போதே அகழியில் நீர் நிரப்ப வேண்டும். இல்லையெனில் ஆண்டு முழுவதும் வறண்டு கிடக்கும் நிலை ஏற்படும். இதனால் பக்தர்கள் மற்றும் பொது மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக பாதிக்கும். எனவே தமிழக அரசு, ஹிந்து சமய அறநிலையத்துறை மூலம் போதிய நிதியை திரட்டி சுற்றுச்சுவரை போர்க்கால அடிப்படையில் விரைந்து கட்டி முடித்து, அகழியில் தண்ணீரை நிரப்ப வேண்டும். இல்லையென்றால், சுற்றுச்சுவர் கட்டுமான பணிகளை அகழியில் தண்ணீர் இல்லாத காலத்திற்கு ஒத்திவைத்துவிட்டு, பொதுப்பணித்துறை மூலம் உடனடியாக முடிகொண்டான் ஆற்றில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து அகழியில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
|