சாம்ராஜ்நகர்; மலை மஹாதேஸ்வரா மலைக்கோவில் உண்டியலில், ஒரே மாதத்தில் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான காணிக்கை வசூலாகியுள்ளது. சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுாரில் மலை மஹாதேஸ்வரா மலைக்கோவில் உள்ளது. இது வரலாற்று பிரசித்தி பெற்றது. கர்நாடகா மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இதனால் கோவிலின் வருவாய், தொடர்ந்து அதிகரிக்கிறது. மாதந்தோறும் உண்டியல் எண்ணப்படுகிறது. ஒரு மாதத்துக்கு முன்பு, கோவில் உண்டியல் எண்ணப்பட்டது. அப்போதும் இரண்டு கோடி ரூபாய் க்கும் அதிகமான காணிக்கை வசூலாகியிருந்தது. போலீஸ் பாதுகாப்புடன் பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியலில் 2 கோடியே 36 லட்சத்து 73,185 ரூபாய் காணிக்கை வசூலாகியிருந்தது. புழக்கத்தில் இல்லாத 2,000 ரூபாய் மதிப்புள்ள 14 நோட்டுகள், 70 கிராம் தங்கம், 1.712 கிலோ வெள்ளி பொருட்களும் காணிக்கையாக வந்துள்ளன. அமாவாசை, விடுமுறை நாட்கள் இருந்ததால் பெருமளவில் பக்தர்கள் வந்ததால், வருவாய் அதிகரித்துள்ளது.