புதுக்கோட்டை; புதுக்கோட்டை, கவிநாடு கண்மாய் வரத்து வாய்க்கால் துார்வாரும் பணியில், கி.பி., 6ம் நுாற்றாண்டு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து, பேராசிரியர் முத்தழகன் கூறியதாவது: நான்கு அடி நீளமும், இரண்டு அடி அகலமும் கொண்ட கற்பலகையில், ஒன்றரை அடிக்கு, ஒரு அடி செவ்வகமாக செதுக்கப்பட்டு, ‘ஸ்ரீ அலரிகூந் என்று பொறிக்கப்பட்டுள்ளது, இதை, ஸ்ரீ அலரிகூன் என பொருள் கொள்ளலாம். கல்வெட்டில் உள்ள எழுத்துக்களின் வடிவமைப்பை கொண்டு, இந்த கல்வெட்டு, கி.பி., 6ம் நுாற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம். இதே கவிநாடு கண்மாயில், கி.பி., 8ம் நுாற்றாண்டை சேர்ந்த மாறன்சடையன் கால மடைக்கல்வெட்டே, இதுவரை பழமையானதாக கருதிவந்த நிலையில், இந்த கல்வெட்டு கண்மாயின் வரலாற்றை, மேலும் இரு நுாற்றாண்டுகள் பழமை மிக்கதாக மாற்றியுள்ளது. கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அலரிகூன் என்பவர், இப்பகுதி ஆண்ட குறுநில தலைவராக இருக்கலாம். அவர் சேந்தமங்கலம் அணை அல்லது இந்த வரத்து கால்வாயை வெட்டி, தெற்கு வெள்ளாற்றில் இருந்து, கவிநாட்டு கண்மாய்க்கு நீர்வரத்தை உருவாக்கி தந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.