பதிவு செய்த நாள்
06
ஆக
2025
11:08
காஞ்சிபுரம்; ஆடி மாத மூன்றாவது செவ்வாய்க்கிழமையான நேற்று, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் செவிலிமேடு செல்லியம்மன், மாரியம்மன், அரசு காத்தம்மன் கோவில் ஆடி திருவிழாவின் நிறைவு நாளான நேற்று மாரியம்மன் பூங்கரகம் வீதியுலா நடந்தது. இரவு 7:00 மணிக்கு மாரியம்மன், காளியம்மன் வீதியுலாவும் நடந்தது. இரவு 12:00 மணிக்கு கும்பம் படையலிடப்பட்டது. சந்தவெளி அம்மன் ஆடி திருவிழாவின் 20வது நாளான நேற்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு சந்தவெளி அம்மனுக்கு நேற்று காலை 9:00 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மஹா தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு சந்தவெளி அம்மன், பெரியபாளையத்து பவானியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வேலாத்தம்மன் சின்ன காஞ்சிபுரம் திருவீதிபள்ளத்தில் உள்ள வரதராஜ பெருமாளின் தங்கையான வேலாத்தம்மன், மாவடி அம்மன் ஆகிய இரு கிராம தேவதைகளுக்கும் நேற்று ஆடி திருவிழா நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 10:00 மணிக்கு வேலாத்தம்மன், மாவடி அம்மன் ஜலம் திரட்டும் நிகழ்வும், மாலை 3:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைக்கும் நிகழ்வும் நடந்தது. நாக கன்னியம்மன் காஞ்சிபுரம் திருக்காலிமேடு மெயின் ரோடு, உப்புகுளம் பகுதியில் உள்ள கன்னியம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவையொட்டி நேற்று காலை 11:00 மணிக்கு 108 பால்குடம் வீதியுலா நடந்தது. மதியம் 12:00 மணிக்கு கூழ்வார்த்தலும், மாலை 5:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடந்தது. ஊஞ்சல் உத்சவம் காஞ்சிபுரம் வணிகர் வீதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் நேற்று காலை மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. மாலை ஊஞ்சல் சேவை உத்சவம் நடந்தது. மாரியம்மன்
காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி கிராமத்தில், ஆடிதிருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை, 10:00 மணி அளவில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம். மதியம் 1:00 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, இரவு 7:00 மணி அளவில், காப்பு கட்டிய பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். அதை தொடர்ந்து, 8:00 மணி அளவில் மலர் அலங்காரத்தில், மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.