கடலுார்; கடலுாரில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கிருஷ்ணர் சிலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கிருஷ்ண ஜெயந்தி விழா, வரும் 16ம் தேதி நாடு முழுதும் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் கோவில்கள், வீடுகளில், கிருஷ்ணர் சிலை வைத்து வழிபடுவது வழக்கம். இதனை முன்னிட்டு கடலுார், சாவடியில் கிருஷ்ணர் சிலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து தொழிலாளி கருணாகரன் கூறுகையில், ‘நாங்கள் 20ஆண்டுகளாக இப்பகுதியில் கைவினை சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். 6 இஞ்ச் சிலை முதல் மூன்று அடி உயரம் வரையில் சிலை தயாரிக்கிறோம். தற்போது கிருஷ்ண ஜெயந்தி வருவதால், கிருஷ்ணரின் பல்வேறு வித உருவங்களை சிலையாக செய்து விற்பனை செய்கிறோம். தமிழ்நாடு முழுவதும் கடலுாரில் தயாரிக்கப்படும் சிலைகள் விற்பனைக்காக எடுத்து செல்லப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் கதுர்த்தி, நவராத்திரி விழா காலம் என்பதால் தற்போது பொம்மை சிலை தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. சிலை தயாரிப்பதற்கு தேவையான களிமண் எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதால் மூலப்பொருள் கிடைப்பதில் சிரமம் இல்லை’ என்றார்.