திருப்புத்துார் அம்மன் கோயில்களில் ஆடித்திருவிழா; முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2025 11:08
திருப்புத்துார்; திருப்புத்துாரில் முத்துமாரியம்மன் கோயில்களில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
நடுத்தெரு முத்துமாரியம்மன் கோயில் திருப்புத்துாரிலிருந்து புராதனக் கோட்டையின் நடுவில் அமைந்துள்ளது. இந்தாண்டு விழா ஜூலை 29 ஆடி வளர்பிறை செவ்வாயில் காப்புக்கட்டி துவங்கியது. முளைப்பாரி போடப்பட்டு தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக,ஆராதனை நடந்தன. நேற்று முன்தினம் கோயிலில் பெண்கள் கும்மியடித்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து கரகாட்டம் நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு பெண்கள் கோயிலிலிருந்து பாரிகளை தலையில் சுமந்து ஊர்வலமாக சென்றனர். திருத்தளிநாதர், கோட்டைக்கருப்பர் கோயில்களில் தரிசனம் செய்து முக்கிய வீதிகளின் வழியாக முப்பெரும் தேவியர் கோயில் வந்தனர். தொடர்ந்து அருகிலுள்ள சீதளிகுளத்திற்கு சென்று பாரியை கரைத்தனர். திருப்புத்துார் நான்கு ரோடு முத்துமாரியம்மன் கோயில் பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் ஆடி முளைப்பாரி திருவிழா ஜூலை 29ல் காப்பு கட்டப்பட்டு துவங்கியது. தொடர்ந்து பக்தர்கள் விரதம் இருந்து அம்மனை வழிபட்டனர். நேற்று முன்தினம் இரவு கோயிலில் முளைகட்டி படையல் வைத்து வழிபாடு நடந்தது. முளைப்பாரி கரகம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர். நேற்று காலை கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்த பின்னர் பெண்கள் முளைப்பாரி எடுத்து சீதளி குளத்தில் கரைக்கப்பட்டது.