மானாமதுரையில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் மஞ்சள் தண்ணீர் ஊற்றும் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஆக 2025 11:08
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை மாறாமல் வருடந்தோறும் மஞ்சள் தண்ணீர் ஊற்றும் விழாவை கன்னார்தெரு பகுதி மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
மானாமதுரை கன்னார் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 157 மண் ஆண்டு ஆடி முளைப்பாரி உற்ஸவ பொங்கல் விழா துவங்கியது.விழாவில் ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம்,பறவை காவடி, அலகு குத்தி எடுத்து வந்து பூக்குழி இறங்கி அம்மனுக்கு பொங்கல் வைத்தும் முளைப்பாரி வளர்த்து அதனை முக்கிய வீதிகளின் வழியே கொண்டு வந்து அலங்கார குளத்தில் கரைத்து அம்மனை வழிபட்டனர்.நேற்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவை முன்னிட்டு அம்மனுக்கு மஞ்சளால் அபிேஷகம் செய்யப்பட்ட பின்னர் தெருக்களில் உறவினர்களுக்கிடையே மாமன்,மச்சான் முறை கொண்ட ஆண்கள் மீது பெண்களும்,முறை பெண்கள் மீது ஆண்களும் மாற்றி,மாற்றி மஞ்சள் தண்ணீர் உற்சாகமாக ஊற்றி கொண்டாடினர்.அந்தப்பகுதி முழுவதும்மஞ்சள் நிறம் படிந்த தண்ணீராக காணப்பட்டது.கன்னார் தெருவைச் சேர்ந்த மணி 42, கூறியதாவது: இந்த விழா தொடர்ந்து 150 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை மாறாமல் நடைபெற்று வருகிறது, வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் கூட இந்த விழாவிற்காக இங்கு வந்து விடுவர், தங்களது உறவினர்கள் மீது மஞ்சள் தண்ணீரை மாற்றி,மாற்றி ஊற்றி கொண்டு சந்தோஷமாக இருப்பது வழக்கமாகி விட்டது, என்றார்.