பழநி முருகன் கோயிலின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோயிலில் (ஜூலை 17 ) ஆடி முதல் நாள் லட்சார்ச்சனை துவங்கியது. பெரியநாயகி அம்மனுக்கு ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் ஜூலை 18, முத்தங்கி அலங்காரம், ஜூலை 25, மீனாட்சி அம்மன் அலங்காரம், ஆக. 1, சந்தன காப்பு அலங்காரம், ஆக. 8, விசாலாட்சி அலங்காரம், செய்யப்பட்டது. தினசரி மாலை சிறப்பு அலங்காரம் செய்து ஒரு லட்சம் மலர்கள் தூவி அர்ச்சனை நடைபெற்றது. ஆடி லட்சார்ச்சனை ஆக.10, நிறைவடைந்தது. இன்று (ஆக.11,) ஆடி லட்சார்ச்சனை யாக பூஜை நடைபெற்றது. முன்னதாக கோயில் யானை கஸ்தூரிக்கு கஜ பூஜை நடந்தது. யாகத்தில் வெள்ளி குடத்தில் புனித நீர் நிரப்பப்பட்டு கலச பூஜை, விநாயகர் பூஜை நடந்தது. யாகத்தில் பட்டுப்புடவைகள், தங்கம், வெள்ளி பொருட்கள் அர்ப்பணம் செய்யப்பட்டது. இதில் சுமங்கலி பூஜை, பிரம்மச்சரிய பூஜை நடைபெற்றது. 108 கலசங்களில் புனித நீர் எடுத்துவரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. யாகத்தினை அமிர்தலிங்கம் குருக்கள் செல்வசுப்பிரமணியம் குருக்கள் குழுவினர் செய்தனர். பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆக. 15, மகா அபிஷேகம், தங்க கவச அலங்காரம் அம்மனுக்கு நடைபெற உள்ளது. அன்று இரவு வெள்ளி ரதத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறும்.