பதிவு செய்த நாள்
12
ஆக
2025
12:08
சில கோவில்கள் பல மர்மங்களையும், அதிசயங்களையும் மறைத்து வைத்துள்ளன. இத்தகைய கோவில்களில் பெலகாவியின் நந்தீஸ்வரர் கோவிலும் ஒன்றாகும்.
பெலகாவி மாவட்டம், அதானி தாலுகாவின் கிளேகாவ் கிராமம் உள்ளது. இது கர்நாடக எல்லைப் பகுதியில் மஹாராஷ்டிராவை ஒட்டியுள்ள கிராமமாகும். இங்கு நந்தீஸ்வரர் கோவில் உள்ளது. பசவண்ணர் கோவில் என்றும் அழைக்கின்றனர்; புண்ணிய தலமாக விளங்குகிறது. கோவிலின் நந்தி சிலை, தானாகவே வளர்ந்து வருவது கோவிலின் மற்றொரு சிறப்பாகும்.
நந்தீஸ்வரர் மகிமை
இங்கு குடிகொண்டுள்ள நந்தீஸ்வரர், முஸ்லிம் மன்னரை மண்டியிட செய்தவர். அன்றைய காலத்தில் பிஜப்பூரை ஆண்ட ஆதில் ஷாஹி சுல்தான் என்ற மன்னர், நந்தீஸ்வரரின் மகிமையை அறிந்தார். அதை சோதித்து பார்க்கவும் முடிவு செய்தார். ஒரு முறை கோவிலுக்கு சென்ற இவர், நைவேத்தியமாக இறைச்சியை படைத்தார். ஆனால், அந்த இறைச்சி கண்ணிமைக்கும் நேரத்தில் அழகான பூக்களாக மாறியது. இதை பார்த்து ஆச்சரியமடைந்த மன்னர், மீண்டும் நந்தீஸ்வரரின் சக்தியை சோதித்து பார்க்க விரும்பினார். விக்ரகத்தின் இரண்டு பக்கமும் ஈட்டியால் குத்தினார். அப்போது ஒரு பக்கத்தில் இருந்து ரத்தமும், மற்றொரு பக்கத்தில் இருந்து பாலும் வழிய துவங்கியது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மன்னருக்கு, பார்வை பறிபோனது. தன் தவறை உணர்ந்த அவர், நந்தி முன் மண்டியிட்டு சரண் அடைந்தார்; மன்னிப்பு வேண்டினார். அதன்பின் அவருக்கு பார்வை திரும்பியது. நந்தீஸ்வரரின் கோவிலை புதுப்பிக்க உதவினாராம். இக்கோவில் ஹிந்து - முஸ்லிம் பாணியில் கட்டப்பட்டு, மத ஒற்றுமையை அறிவுறுத்துகிறது.
சிறிய துவாரம்
கோவில் கட்டப்படும் போது, நுழைவு வாசல் அருகில் ஜன்னல் வடிவில், சிறிய துவாரம் அமைக்கப்பட்டது. இதன் வழியாக பார்த்தால், நந்தி வடிவில் அருள்பாலிக்கும் சிவனின் அற்புதமான காட்சியை காணலாம். கோவில் மூடப்பட்டிருக்கும் போது, கடவுளை தரிசிக்க முடியவில்லை என, பக்தர்கள் வருத்தத்துடன் செல்லக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில், இந்த துவாரத்தை அமைத்துள்ளனர். இதன் வழியாக நந்தீஸ்வரரை தரிசிக்கலாம். இங்குள்ள நந்தி சுயம்புவாக உருவானதாம்.
பல நுாற்றாண்டுகளாக, கோவிலில் தினமும் பூஜைகள், அபிஷேகம் நடக்கின்றன. ஆண்டு தோறும் திருவிழா நடத்தப்படுகிறது. இத்திருவிழா ஒரு மாதம் வரை நடக்கும். வாரந்தோறும் திங்கட் கிழமை மாலையில் பல்லக்கு உற்சவம் நடக்கிறது. இந்த கோவிலுக்கு, கர்நாடகா மட்டுமின்றி, மஹாராஷ்டிரா, ஆந்திரா, குஜராத், டில்லி உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பக்தர்கள் வருகின்றனர். தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது: தங்கும் வசதியும் உள்ளது.
எப்படி செல்வது?
பெலகாவியில் இருந்து 177 கி.மீ., விஜயபுராவில் இருந்து 83 கி.மீ., பெங்களூரில் இருந்து 604 கி.மீ., தொலைவில், இக்கோவில் உள்ளது. அனைத்து நகரங்களில் இருந்து, கே.ஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் வசதியும் உள்ளது. விமானத்தில் வருவோர், பெலகாவியின் சாம்ப்ரா விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பஸ் அல்லது வாடகை வாகனங்களில், கோவிலுக்கு செல்லலாம்.
தரிசன நேரம்: காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.