பதிவு செய்த நாள்
12
ஆக
2025
12:08
கர்நாடகாவில் எண்ணிலடங்கா கோவில்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் அற்புதமான, அதிக சக்தி வாய்ந்த கோவிலாகும். குறிப்பாக அம்மன் கோவில்கள் எண்ணிக்கை அதிகம். இவற்றில் பிளேக் மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும்.
பெங்களூரு பல்வேறு கலாசாரம் கொண்ட நகர். இங்கு வானுயர்ந்த அடுக்குமாடி கட்டடங்கள், ஷாப்பிங் மால்கள், அம்யூஸ்மென்ட் பார்க்குகள் மட்டுமல்ல, புராதன கோவில்களுக்கும் பஞ்சம் இல்லை. இங்குள்ள பிளேக் மாரியம்மன் கோவில் வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களில் ஒன்றாகும். இங்கு குடிகொண்டுள்ள அம்மனை வணங்கினால், நோய்கள் விலகும் என்பது ஐதீகம்.
19ம் நுாற்றாண்டு
கொரோனா தொற்று மக்களை எப்படி வாட்டி வதைத்ததோ, அதே போன்று 19ம் நுாற்றாண்டில், பிளேக் நோய் மக்களை பாடாய் படுத்தியது. அதிகமான மக்களை பலி வாங்கியது. இதை கட்டுப்படுத்த முடியாமல், அன்றைய மன்னர்களும் பரிதவித்தனர். இனி மன்னர்களை நம்பி பயனில்லை என்ற முடிவுக்கு வந்த மக்கள், அம்மனை வழிபட முடிவு செய்தனர்.
பெங்களூரின் தியாகராஜநகரில் அம்மன் கோவில் கட்டினர். தினமும் பூஜித்து, பிளேக் நோயில் இருந்து, தங்களை காப்பாற்றும்படி வேண்டினர். அதன்பின் நோய் மறைந்தது. இங்கு குடிகொண்டுள்ள அம்மனுக்கு, பிளேக் மாரியம்மன் என்ற பெயர் ஏற்பட்டது. தன்னை நாடி வரும் பக்தர்களை நோய்களில் இருந்து அம்மன் காப்பாற்றுவார் என்பது ஐதீகம். 1898ல் இக்கோவில் கட்டப்பட்டது. பெங்களூரின் மிகவும் பழமையான கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.
பெங்களூரில் தியாகராஜநகர் மட்டுமின்றி, சாந்திநகர், ஹலசூரு, ஆனேக்கல் உட்பட பல்வேறு இடங்களில் பிளேக் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. பிளேக் ராஜராஜேஸ்வரி அம்மன் பெயர்களிலும் கோவில்கள் உள்ளன. இங்கு சென்று வேண்டினால், கொடுமையான நோய்கள் குணமாகும் என்பது, மக்களின் நம்பிக்கை. இக்கோவில்களில் தினமும் பூஜைகள் நடக்கின்றன. ஆண்டு தோறும் உற்சவம், திருவிழாக்கள் நடக்கின்றன.
பஞ்சாய் பறக்கும்
அந்த காலத்தில் தொற்று நோய்கள் பரவினால், அதற்கு அம்மனின் கோபமே காரணம் என, மக்கள் நம்பினர். பெண் கடவுள் தாய் போன்றவர். இவரை, மனமுருகி வேண்டினால் கஷ்டங்கள் விலகி ஓடும். அவரது பெயரில் கோவில் கட்டி வழிபட்டால், நம்மை காப்பாற்றுவர் என, நம்புகின்றனர். இந்த நம்பிக்கையால் கோவில் கட்டும் சம்பிரதாயம் துவங்கியது. இதனால் பல இடங்களில் பிளேக் மாரியம்மன் கோவிலை கட்டினர்.
இதற்கு முன் ஊருக்குள் பிளேக் நுழையாமல் தடுப்பார் என்ற நோக்கில், ஊருக்கு வெளியே கோவில் கட்டினர். காலப்போக்கில் பெங்களூரு வளர்ந்ததால், அனைத்து கோவில்களும் நகருக்குள் சேர்ந்து கொண்டன. மக்களின் நம்பிக்கையை, மூட நம்பிக்கை என, ஒதுக்க முடியாது. இந்த கோவில்களுக்கு வந்து தரிசனம் செய்த பலருக்கு நோய்கள் குணமான உதாரணங்கள் உள்ளன. இங்கு கண்ணுக்கு தெரியாத சக்தி இருக்கலாம் என, மக்கள் கருதுகின்றனர். இன்றைக்கும் பிளேக் மாரியம்மன் கோவிலில், பக்தர்கள் கூட்டத்தை காணலாம். வெளி மாநிலங்களில் இருந்தும், பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். தற்போது ஆடி மாதம் என்பதால், கோவில்களில் சிறப்பு பூஜைகள், திருவிழா, தீமீதி என, பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
எப்படி செல்வது?
பெங்களூரின் முக்கியமான பகுதிகளில் தியாகராஜ நகரும் ஒன்றாகும். நகரின் மெஜஸ்டிக், சிவாஜிநகர், மல்லேஸ்வரம், யஷ்வந்த்பூர் உட்பட அனைத்து பகுதிகளில் இருந்தும் தியாகராஜ நகருக்கு பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆட்டோக்கள், வாடகை வாகனங்களிலும் செல்லலாம்.
தரிசன நேரம்: காலை 7.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை; மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.