ஊர்க்காவலன் சுவாமி கோயிலில் கொள்ளையடிக்க வந்து டூவீலரை விட்டு சென்ற திருடர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஆக 2025 02:08
திருப்புவனம்; திருப்புவனம் அருகே வில்லியரேந்தல் ஊர்க்காவலன் சுவாமி கோயில் உண்டியலை கொள்ளையடிக்க வந்த திருடர்கள், பொதுமக்கள் வந்ததால் டூவீலரை விட்டு விட்டு தப்பினர்.
மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையை ஒட்டி ஊர்க்காவலன் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன் கிராமத் திருவிழா மற்றும் ஆடித்திருவிழாக்கள் நடந்து முடிந்தன. கோயில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்த மூன்று உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. நேற்று நள்ளிரவில் புத்தம் புதிய டூவீலரில் வந்த திருடர்கள் இருவர் சுவர் ஏறி குதித்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்தனர். பின் கோயில் அலுவலக அறையை உடைக்க முயன்ற போது ஆட்கள் வரும் சப்தம் கேட்டு சுவர் ஏறி குதித்து தப்பியோடிவிட்டனர். தகவலறிந்து நள்ளிரவில் திரண்ட பொதுமக்கள் திருப்புவனம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் டூவீலரை கைப்பற்றி திருடர்களை தேடினர். ஆனால் சிக்கவில்லை. புதிய டூவீலரும் வேறு எங்காவது திருடி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கோயில் உண்டியலை உடைக்க முயன்ற திருடர்கள் கைலியை வைத்து முக்காடிட்டு உடைத்தது சி.சி.டி.வி., காட்சிகளில் பதிவாகி இருந்தது. அதனை வைத்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கிராமமக்கள் கூறுகையில்: உண்டியலில் ஒரு லட்ச ரூபாய் வரை இருந்திருக்க வாய்ப்புண்டு, தங்க நகை பற்றி தெரியவில்லை. ஏற்கனவே இரு முறை உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டதால் ஒரு சில்வர் உண்டியலை இரும்பு லாக்கர் உண்டியலாக மாற்றி விட்டோம், சில்வர் உண்டியலை உடைத்துதான் திருடியுள்ளனர். ஏற்கனவே நடந்த இரு திருட்டுகளிலும் குற்றவாளிகள் கண்டறிய முடியவில்லை. எனவே இந்த திருட்டிலாவது குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், என்றனர்.