மங்கலம் மாதேசிலிங்கம் கோவில் திருப்பணிகள் துவங்கியது
பதிவு செய்த நாள்
24
செப் 2025 05:09
பல்லடம்; அறநிலையத்துறையின் அனுமதி பெற்று, மங்கலம் மாதேசிலிங்கம் கோவில் திருப்பணிகள் துவங்கியுள்ளதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். திருப்பூரை அடுத்த மங்கலத்தில் மாதேசிலிங்கம் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவில், நீண்ட காலமாக பராமரிப்பின்றி சிதலமடைந்து இருந்தது. கோவிலை புனரமைத்து திருப்பணி மேற்கொள்ள, இப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் முடிவு செய்தனர். இதற்காக, மலைக்குன்றின் மீது அமைந்திருருந்த கோவில் இடித்து அகற்றப்பட்டது. இது குறித்து கோவில் நிர்வாகிகள் கூறியதாவது: பல ஆண்டுகளாக சிதிலடைந்து கிடந்த மாதேசிலிங்கம் கோவிலை, புதுப்பிக்க திட்டமிட்டு, அறநிலையத்துறையின் அனுமதியுடன், கோவில் இடித்த அகற்றப்பட்டது. இதனை சிலர் தவறுதலாக புரிந்து கொண்டு, கோவில் மாயமானதாகவும், பாலாலயம் நடந்ததா? என்றும் கேள்வி எழுப்பியது குழப்பத்தை ஏற்படுத்தியது. கடந்த, மே 4ம் தேதி அன்று, கோவில் செயல் அலுவலர் வளர்மதி, கோவில் நிர்வாகி அங்குராஜ் ஆகியோர் முன்னிலையில், ஆகம விதிகளை பின்பற்றி, பாலாலய கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் பலரது பங்களிப்புடன், கோவில் திருப்பணி மேற்கொண்டு, கும்பாபிஷேகம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
|