உத்திரமேரூர்; மானாம்பதி சோழியம்மன் கோவில் குளத்தை சீரமைக்கும்படி பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். உத்திரமேரூர் தாலுகா மானாம்பதி கிராமத்தில், சோழியம்மன் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், அமாவாசை, பவுர்ணமி, சிவராத்திரி போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இக்கோவில் குளம் மூன்று ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. அதன்பின், முறையாக பராமரிக்கப்படவில்லை. குளத்தின் கரைகளில் செடி, கொடிகள் வளர்ந்து படிக்கட்டுகள் இருப்பதே தெரியாத நிலையில் உள்ளது. அத்துடன், விஷப் பூச்சிகளின் நடமாட்டமும் உள்ளது. எனவே, மானாம்பதி சோழியம்மன் கோவில் குளத்தை சீரமைக்க, ஹிந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.