பதிவு செய்த நாள்
06
அக்
2025
03:10
ஆதிசங்கரரின் ஸ்லோகத்தில் உள்ள ‘ஜந்துானாம் நர ஜன்மம் துர்லபம்’ என்ற வரியை அடிக்கடி காஞ்சி மஹாபெரியவர் குறிப்பிடுவார். இதன் பொருள் தெரியுமா?
பூமியில் எத்தனையோ உயிரினங்கள் வாழ்ந்தாலும் மகத்தானது மனிதப் பிறவியே.
இதன் அருமையை உணர்ந்து பக்தியில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் மோட்சம் என்ற சாம்ராஜ்யத்தை அடைய முடியும். மற்ற உயிர்களுக்கு கொடுத்த விசேஷ உடல் அமைப்பு மனிதர்களான நமக்குத் தரப்படவில்லை.
உதாரணமாக குதிரை வேகமாக ஓடுகிறது. அதற்கு போட்டியாக மனிதனால் ஓட முடியாது.
காட்டுராஜாவான சிங்கத்திடம் இருக்கும் மிடுக்கு, பலம் நம்மை பிரமிக்க வைக்கும். சிங்கத்தைப் பார்த்தாலே மற்ற விலங்குகள் எல்லாம் நடுங்கும்.
ஆட்டுக்கு தடிமனான தோல், ரோமத்தை பகவான் கொடுத்திருக்கிறார். குளிர், மழையின் தாக்கத்தில் இருந்து அது சுலபமாகத் தப்பித்து விடும்.
அப்படி என்றால் மனிதன் எந்த விதத்தில் உசத்தியானவன்? விலங்குகளுக்கு பல வசதிகளைக் கொடுத்த கடவுள் மனிதனுக்கு என்ன கொடுத்தான் எனக் கேட்டால் எந்த வசதியும் தரவில்லை. அதை ஏற்படுத்திக் கொள்ள உயர்ந்த அறிவைக் கொடுத்தான்.
அறிவின் துணையால் வேகமாக ஓடும் குதிரை மீதேறி சவாரி செய்கிறான்.
ஒரு குச்சியை கையில் வைத்துக் கொண்டு பலசாலியான சிங்கத்தைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறான்.
ஆட்டு ரோமத்தில் குளிரைத் தாங்கும் விதமாக ஆடை தைத்துக் கொள்கிறான்.
அதனால் தான் மனிதனை உசத்தி எனப் பாராட்டுகிறோம்.
இதனால் தான் மனித பிறவி கிடைப்பது அரிது என்கிறோம். ஆனால் எந்த ஒரு உயிரும் மற்றொரு உயிரை ஏமாற்றிப் பிழைப்பதில்லை. மனிதனோ சக மனிதனையே ஏமாற்றிப் பிழைக்கிறான்.
மனிதனைத் தவிர வேறெந்த உயிர்களும் எதிர்கால தேவை கருதி சேமிப்பு செய்வதில்லை.
இந்த மாதிரியான தீமைகளைக் கைவிட்டு மனிதப்பறிவியில் ஒழுக்கம், நேர்மையைப் பின்பற்றி முறையாக வாழ்வது அவசியம். அப்போதுதான் கடவுளின் திருவடியை அடைய முடியும்.
எப்படி வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து வாழ்பவனே புத்திசாலி