பல்லடம்; கந்த சஷ்டி, சூரசம்ஹார விழாவை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவிலில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் காப்புக் கட்டி விரதத்தை துவக்கினர்.
கந்த சஷ்டி எனப்படும் சூரசம்ஹார விழா, ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்லடத்தை அடுத்த, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், சூரசம்ஹார விழாவை நேற்று துவங்கியது. காலை, 4.00 மணிக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகளை தொடர்ந்து, விநாயகர் வேள்வியும், இதனை அடுத்து காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. இளம் பெண்கள், தாய்மார்கள், இளைஞர்கள், சிறுவர் சிறுமியர் என, நூற்றுக்கணக்கான பக்தர்கள், காப்புக் கட்டி விரதத்தை துவக்கினர். இன்று, காலை, 10.30 மணிக்கு வேல்மாறல் பாராயணம்; நாளை, கந்த சஷ்டி கவச பாராயணம் ஆகியவை நடைபெற உள்ளன. அக்., 25 அன்று, முத்துக்குமாரசுவாமிக்கு லட்சார்சனையும், மறுநாள், வேள்வி வழிபாடுகள் மற்றும் மரகதாம்பிகை தாயாரிடம் வெற்றிவேல் பெறுதல் நிகழ்வு ஆகியவை நடக்கின்றன. அன்று இரவு, 7.00 மணிக்கு சூரனை பதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்க உள்ளது. தொடரந்து, 28ம் தேதி, திருக்கல்யாண நிகழ்வும் நடைபெற உள்ளது.