காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, கிளார் கிராமத்தில் உள்ள அறம்வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் கோவிலில், 7ம் ஆண்டு வருஷாபிஷேகம் மற்றும் திருக்கல்யாண உத்சவம் நேற்று விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் அடுத்த, கிளார் கிராமத்தில், அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட அறம்வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் இருந்த இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, 2018ல் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வருஷாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஏழாம் ஆண்டு வருஷாபிஷேக பெருவிழா நேற்று காலை 8:00 மணிக்கு கோ பூஜையுடன் துவங்கியது. அதை தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, மஹா அபிஷேகமும், யாக சாலை பூஜை, யாக வேள்வியும், காலை 8:30 மணிக்கு சங்காபிஷேகமும், காலை 10:00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, கடம் புறப்பாடும் தொடர்ந்து வருஷாபிஷேகமும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு, அகத்தீஸ்வரருக்கும், அறம்வளர்நாயகிக்கும் திருக்கல்யாண மஹோத்சவம் விமரிசையாக நடந்தது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் முக்கிய வீதி வழியாக உலா வந்தனர். விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் திருப்பணி குழுவினர், கிளார் கிராம பொதுமக்கள், அகத்தீஸ்வரர் கைலாய வாத்திய குழுவினர் இணைந்து செய்திருந்தனர்.