பழங்குடியினரின் ‘பூ புத்தரி’ திருவிழா மழையிலும் சிறப்பாக நடந்தது
பதிவு செய்த நாள்
28
அக் 2025 12:10
கூடலுார்: கூடலுாரில், பழங்குடியினரின் பாரம்பரியமான நெற்கதிர் அறுவடை திருவிழா, மழையிலும் சிறப்பாக நடந்தது. நீலகிரி மாவட்டம், கூடலுார் பழங்குடி மக்கள் சார்பில் நெற்பயிர்களுக்கு நன்றி செலுத்தும் வகையிலும், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் நலமுடன் இருக்கவும், வனவிலங்குகளால், நெற் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, ஆண்டு தோறும் நெல் அறுவடைக்கு முன்பாக பாரம்பரியமான பூ புத்தரி எனப்படும் கதிர் அறுவடை திருவிழாவை ஐப்பசி மாதம் 10ம் நாள் கொண்டாடி வருகின்றனர். நடப்பு ஆண்டு, திருவிழா நேற்று, நடந்தது. இதற்காக, விழா நம்பாலாகோட்டை வேட்டைக்கொரு மகன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பழங்குடியினர், அங்கிருந்து புத்தூர்வயல் வந்தனர். அங்குள்ள வயலில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் பாரம்பரிய இசையுடன் விளக்கேற்றி பூஜையுடன், பூ புத்தரி திருவிழா நடந்தது. இதற்காக 10 நாட்கள் விரதம் இருந்த பழங்குடியின ஆண்கள் நெற்கதிர் அறுவடை செய்து, அதனை கட்டுகளாக கட்டி ஊர்வலமாக வட்டப்பாறை பகவதி அம்மன் கோவிலுக்கு எடுத்து சென்றனர். அங்கு நெற்கதிர்களுக்கு பூஜை செய்தனர். தொடர்ந்து, கொட்டும் மழையில் சேற்றையும் பொருட்படுத்தாமல் பழங்குடியின பெண்கள் பாரம்பரிய நடனமாடி அசத்தினர். பூஜை செய்யப்பட்ட நெ ற்கதிர்கள் மங்குழி பகவதி அம்மன் கோயில், புத்தூர்வயல் விஷ்ணு கோவில், தேவாலா வேட்டைக்கொருமகன், நம்பாலாக்கோட்டை வேட்டைக்கொருமகன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.கோவில்களில் நெற்கதிருக்கு சிறப்பு பூஜை செய்து விவசாயிகளுக்கு பிரசாதமாக வழங்கினர். விழாவில், பழங்குடியினர் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பழங்குடியினர் கூறுகையில், நெல் அறுவடைக்கு முன் பாரம்பரியமாக நெற்கதிர் அறுவடை திருவிழா கொண்டாடி வருகின்றனர். அறுவடை செய்யப்படும் நெற்கதிர்களை கோவில்களுக்கு எடுத்துச் சென்று அங்கு பூஜை செய்து விவசாயிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படும். அதன் பின்பே நெல் அறுவடை நடைபெறும். பாரம்பரியமாக நடைப்பெறும் விழாவை, தமிழக முதல்வர் பாரம்பரிய திருவிழாவாக அறிவித்தால் இவ்விழாவுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்றனர்.
|