திருமுருகன்பூண்டி திருமுருக நாத சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28அக் 2025 02:10
அவிநாசி; திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் கோவிலில் கந்த சஷ்டி நிறைவு விழாவான திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருமுருகன் பூண்டியில் திருமுருகநாத சுவாமி கோவிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 5000ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். கொங்கேழு சிவஸ்தலங்களில் ஒன்றாக புகழ்பெற்ற விளங்கும் திருமுருகன்பூண்டி திருமுருக நாத சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா,கடந்த 22ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு திருமுருகநாத சுவாமி கோவிலில் தினசரி காலை மற்றும் மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரமும் நடைபெற்றது. நேற்று முருகப்பெருமான் 4 வீதிகளும் வலம் வந்து சூரனை வதம் செய்தார். அதனைத் தொடர்ந்து இன்று காலை திருக்கல்யாணத்திற்காக திருமுருகன்பூண்டி கோவிலின்,புதிதாக கட்டப்பட்ட வரும் திருக்கல்யாண மண்டபத்தில் வள்ளி தெய்வானை உடனமர் சண்முகநாதர் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியத்துடன் சண்முகநாதர் வள்ளி தெய்வானைக்கு திருமாங்கல்யம் கட்டினார்.
அதன் பின்னர் சிறப்பு மஹா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் அனைவரும் அர்ச்சனை தூவி அரோகரா கோஷத்தோடு சண்முகநாதரை வழிபட்டனர். பக்தர்களுக்கு திருமாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கல்யாண உற்சவத்தில் பக்தர்கள் மொய்ப்பணம் எழுதுதல், பாத காணிக்கை அடுத்து வெள்ளி யானை வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் சண்முக நாதர் எழுந்தருளி திருவீதி உலா கோலாகலமாக நடைபெற்றது. திருக்கல்யாணத்தில் 5000ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருக்கல்யாண உற்சவ விழாவை முன்னிட்டு திருமுருகன் பூண்டி இன்ஸ்பெக்டர் இளங்கோ,அவிநாசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை வீரர்கள் உள்ளிட்டோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மண்டபத்தில் பக்தர்களின் வசதிக்காக நான்கு இடங்களில் எல்.இ.டி.திரைகள் பொருத்தப்பட்டு திருக்கல்யாண உற்சவத்தை பக்தர்கள் கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் விமலா, அறங்காவலர்கள் குழு தலைவர் ராமநாதன், அறங்காவலர்கள் பாலகிருஷ்ணன், உமாகாளீஸ்வரி, சென்னியப்பன், பழனிச்சாமி மற்றும் கோவில் சிவாச்சாரியார்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.