கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03நவ 2025 04:11
தஞ்சாவூர்; காவிரி தென்கரையில் உள்ள தளங்களில் 26-வது தலமாக ஆதிகும்பேஸ்வர சாமி கோவில் உள்ளது. உலகம் தோன்றுவதற்கு ஆதி காரணமாக விளங்கும் பராபரம் கும்பத்தில் இருந்து கோவில் தோன்றியதால் இக்கோவிலுக்கு ஆதி கும்பேஸ்வர சாமி கோவில் என பெயர் வந்தது. உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் போற்றப்படும் மகாமக பெருவிழா ஆதி கும்பேஸ்வரர் சாமி கோவிலில் தொடர்புடைய விழாவாகும். மந்திரபீடேஸ்வரி என்கிற மங்களாம்பிகை அம்பாளுடன் ஆதிகும்பேஸ்வர சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த கோவிலில், கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 5-ம்தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
இதையடுத்து மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய, முடிவு செய்யப்பட்டு, ஹிந்துசமய அறநிலையத்துறை, கோவில் நிர்வாகம் சார்பிலும், அறங்காவலர்கள் குழு சார்பிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், கோவில் வளாகத்தில் இருந்த கொடிமரம் சேதமடைந்ததால், புதிய கொடி மரம் நட முடிவு செய்யப்பட்டது. அதன்படி கேரளாவில் இருந்து 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரே தேக்கு மரம் லாரியில் கொண்டு வரப்பட்டது. பணியாளர்கள் வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இன்று கோவிலில் பூர்வாங்க பூஜைகள் முடிந்த பிறகு, புதியதாக செய்யப்பட்ட கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இரும்பு கொடிமரம் சேதம் அடையாமல் இருக்க உலோகத்தினால் செய்யப்பட்ட தகடு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.